செய்திகள்

ஆட்சியை ஒப்படையுங்கள் அடுத்த நாளே பாராளுமன்றை கலைப்போம்: மைத்திரியிடம் மகிந்த அணி

தற்போதைய அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து நீக்கிவிட்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாகவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பது தொடர்பில் ஜனாதிபதியிடம் பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மகிந்த தரப்பு அணி ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதாகத் தெரிவித்துள்ளது.

நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ;

அரசாங்கத்தில் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் சிலர் தமது அமைச்சுப் பதவியினை இராஜினாமா செய்து எதிர்க்கட்சிக்கு திரும்பியுள்ளனர். இது எதிர்க்கட்சியின் பலமான தன்மையையும் அரசாங்கத்தின் ஸ்திரமற்ற நிலைமையையும் காண்பிக்கிறது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பலர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்து எம்முடன் வந்து இணைவார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மட்டுமல்லாது ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் சிலர் எம்முடன் வந்திணைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை நாம் கொண்டு வரவுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்படும். அதனை பாராளுமன்ற சம்பிரதாயத்தின் அடிப்படையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்கு சபாநாயகர் உதவுவார் என நாம் நம்புகிறோம்.

கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதியுடனான சந்திப்பொன்றில் தற்போது ஆட்சியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினை விலக்கிவிட்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாகவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் ஆட்சிப் பொறுப்பை கையளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தோம்.

ஜனாதிபதியுடனான சந்திப்பு எமக்கு வெற்றியளித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிகளான திஸ்ஸ விதாரண , டியூ. குணசேகர, ஆறுமுகம் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா, அதாவுல்லா, ஹிஸ்புல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தேர்தலுக்கு முன் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் ஆட்சிப் பொறுப்பை கையளித்தால் நாம் ஆட்சியை பொறுப்பேற்று அடுத்த தினமே பாராளுமன்றத்தைக் கலைத்து விடுவோம். பாராளுமன்றத்தை கலைப்பது எமது வெற்றியின் ஓர் அங்கமாகவே பார்க்கப்படுகிறது. அத்துடன் ஜனநாயக முறையில் பொது தேர்தலில் போட்டியிடுவோம்.

எமது தரப்பின் சார்பில் பிரதம வேட்பாளர் யார் என்பதை நாம் தீர்மானித்துவிட்டோம். ரணில் பதவி விலகினார், என்ற தகவலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தால் பிரதம வேட்பாளரின் பெயரை நாம் தெரிவிப்போம் எனெவும் தெரிவித்தார்.