செய்திகள்

ஆட்சி, அதிகாரத்தைவிட, நாட்டின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம்: ராஜ்நாத்சிங் தெரிவிப்பு

காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் மஸ்ரத் ஆலம் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக கடும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தேச பாதுகாப்புக்குதான் தங்கள் அரசு முன்னுரிமை அளிக்கும் என்றும் காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதில் அக்கறை செலுத்தமாட்டோம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

மத்திய பாதுகாப்பு படை பிரிவின் 46 வது எழுச்சி நாளையொட்டி காசியாபாத்தில் இன்று, நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பின்னர் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான ராஜ்நாத் சிங் கூறியதாவது: எந்த நிலையிலும் எங்கள் அரசு தேச நலனில் சமரசம் செய்து கொள்ளாது. எங்களை பொறுத்தவரை கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எந்த அரசாங்கமாக இருந்தாலும் எங்களுக்கு அது முக்கியமில்லை. நாட்டிற்கும் பாதுகாப்புக்கும்தான் நாங்கள் முன்னுரிமை அளிப்போம். எங்களுடைய எண்ணத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாடாளுமன்மறத்தில் நேற்று கூறிய கருத்தைத்தான் தற்போதைக்கு நான் தெரிவிக்க உள்ளேன். எங்களை பொறுத்தவரை காஷ்மீர் மாநில ஆட்சி, முக்கியமில்லை. ஆனால், நாடுதான் எங்களுக்கு முன்னுரிமையானது இந்த உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத்துடன், மசாரத் ஆலம் விடுதலை தொடர்பாக ராஜ்நாத் சிங் பேசியதாக வெளியான தகவல் குறித்து கேட்டபோது, “ஜம்மு காஷ்மீர் முதல்வருடன் கடந்த மூன்று ஆண்டுகளாக நான் பேசவில்லை” என்று ராஜ்நாத்சிங் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ள மக்கள் ஜனநாயக கட்சி பதவியேற்ற ஒரு சில நாட்களில் பிரிவினைவாத தலைவர் மஸ்ரத் ஆலத்தை விடுதலை செய்து சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.