செய்திகள்

ஆட்சி மாற்றத்தால் மாத்திரம் உண்மை சுதந்திரம் வந்து விடாது: மனோ கணேசன்

இன்று பாராளுமன்ற மைதானத்தில் நடைபெற்ற அதிகாரபூர்வ தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துக்கொள்ள விசேட விருந்தினர் அழைப்பு இருந்தும் நான் அதில் பங்கு பற்றவில்லை. ஆட்சி மாற்றம் வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. இவ்வேளையில் ஓடோடி சென்று எமக்கு முழுமையான சுதந்திரம் வந்துவிட்டதான தோற்றப்பாட்டை ஏற்படுத்த எனக்கு மனமில்லை. அதற்காக நான் தேசிய சுதந்திர விழாவை பகிஷ்கரிக்கின்றேன் என அர்த்தமில்லை. ஆனால், ஆட்சி மாற்றத்தின் மூலமான சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டாட நமது மக்களுக்கு இன்னமும் கொஞ்சம் கால அவகாசம் கொடுப்போம் என்றும், அதேபோல் அதை பெற்றுக்கொடுக்க நமது அரசுக்கும் கொஞ்சம் கால அவகாசம் கொடுப்போம் என்றும் நான் நினைக்கின்றேன்.

நான் சுதந்திர தினத்தை புறக்கணிக்க வில்லை. அதனால்தான் நமது கட்சியின் மூலமாக இங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு உங்களிடம் என் மனசாட்சியை திறந்து உண்மையை கூறுகிறேன். தேசிய ஆட்சியில் மாற்றம் வந்து விட்டதால் மாத்திரம் எங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட சுதந்திரம் மீண்டும் வந்துவிடாது. இந்த நாட்டின் தேசிய மனசாட்சியில் மாற்றம் வந்தால் மாத்திரமே உண்மை சுதந்திரம் வரும். நான் கூறுவதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொவார்கள் என நம்புகின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வடகொழும்பு இந்து கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இந்த கல்லூரி மாணவிகள் இப்போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடினார்கள். எமது தாய் நாட்டை கொண்டாடி, தமிழ் மொழியில், நமோ, நமோ, தாயே, நம் ஸ்ரீலங்கா என்று பாடக்கூட எங்களுக்கு உரிமை மறுக்கப்பட்டு இருந்தது. தமிழ் பிரதேசங்களில் அரசு நிகழ்வுகளிலும், நாடு முழுக்க தமிழ் மொழி மூல பாடசாலைகளிலும் கடந்த காலங்களில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாட விடலாமா என்று ஒரு சந்தேகம் ஆசிரிய அதிபர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இருந்தது. இப்போது அந்த உரிமை வந்துவிட்டது என்பதை நாம் அதிகாரப்பூர்வமாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, கல்வி அமைச்சு மூலமாக மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு அவகாசம் வேண்டும்.

சிறையில் இருப்பவர்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். காணாமல் போனவர்கள் பற்றிய பதில்கள் கிடைக்கவேண்டும். அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா, இல்லையா, இருந்தால் எங்கே இருக்கின்றார்கள் என்ற தகவல்கள் வெளியாக வேண்டும். அதற்கும் அவகாசம் வேண்டும்.

இந்த பாடசாலை இன்னமும் விரிவு படுத்தி கட்டப்பட வேண்டும். பக்கத்தில் உள்ள தனியார் நிலத்துண்டு ஒன்று ஏற்கனவே வாங்கப்பட்டு விட்டது. இன்னொரு துண்டையும் நாம் வாங்க உள்ளோம். இவற்றில் கட்டிடம் கட்டப்பட வேண்டும். இவற்றுக்கு நாம் தனியார் நிதிகளை மட்டும் செலவிட முடியாது. சகோதர இனத்து பாடசாலைகளுக்கு வழங்கப்படுவது போல் எமது பாடசாலைகளுக்கும் அரசு நிதி கிடைக்க வேண்டும். பத்து வருடங்களுக்கு முன் பத்து இலட்சம் ரூபாவை ஒதுக்கி நான் இங்குள்ள மாடிக்கட்டிட கட்டுமானத்தை ஆரம்பித்து வைத்தேன். இன்னமும் அரசு நிதி வேண்டும். அதன்மூலம்தான் கஷ்டப்படும் இந்த பிள்ளைகள் படிக்கும் இந்த பாடசாலையை தேசிய கல்லூரியாக மாற்ற முடியும். இதை நான் நிச்சயம் செய்வேன். என் கரங்களுக்கு விரைவில் அதிகாரம் வரும். என்னை நம்புங்கள்.

இதற்கு நமது ஆட்சி வேண்டும். அது இன்று வந்து விட்டது. முறைத்து நின்ற அரசு போய் விட்டது. நாம் எமது பிரச்சினைகள் பற்றி உரையாடக்கூடிய சிரித்த முகங்கொண்ட ஒரு அரசு இப்போது தோன்றியுள்ளது. இது கடந்த காலத்தை விட முன்னேற்றகரமானது. ஆனால், தீர்வு என்பது இந்த அரசாங்கத்தில் பங்காளிகளாக இருப்பது என்பது மட்டும் அல்ல. அரசாங்கம் என்பது இன்று வரும், நாளை போய் விடும். நிரந்தரமான தீர்வு என்பது, இலங்கை இராஜ்ஜியத்தில் பங்காளிகளாக இருப்பது என்பதாகும். அதற்கு இந்நாட்டின் அரசியலமைப்பில் மாற்றம் வேண்டும். அதைதான் நான் சுட்டிக்காட்டுகின்றேன். ஆட்சி மாற்றம் மட்டும் போதாது, தேசிய மனசாட்சியில் மாற்றம் வேண்டும் என கூறுகின்றேன். அதன்மூலம்தான் நாம் நிரந்தர தீர்வுகளை பெற முடியும். அதுவரை முழு மனதுடன் என்னால் சுதந்திரத்தை கொண்டாட முடியாது.