செய்திகள்

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் மீனவர்கள் கைது தொடருவதா? முதலமைச்சர் பன்னீர்ச் செல்வம் கேள்வி

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், தமிழக மீனவர்களின் கைது தொடர்வது வேதனை அளிப்பதாகவும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வெள்ளிக்கிழமை எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அக்கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

தமிழகத்தைச் சேர்ந்த 29 மீனவர்களையும், அவர்களின் மூன்று படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், இதுபோன்ற கைது சம்பவங்கள் ஏற்படுவது வருத்தம் அளிக்கிறது.

தமிழக மீனவர்களின் நலன்களையும், அவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. கச்சத்தீவு பகுதியில் அந்தோணியார் கோயில் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், இதுபோன்ற கைது சம்பவம் நிகழ்ந்திருப்பது அந்த விழாவுக்கான கொண்டாட்ட சூழலையே முற்றிலும் சிதைப்பதாக உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளால், இலங்கை வசம் நீண்ட நாள்களாக இருந்த 81 தமிழக மீனவர்களின் படகுகள் விரைவில் விடுவிக்கப்படும் நிகழ்வை தமிழக மீனவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இப்படிப்பட்ட நிலையில், மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலுள்ள 10 இலட்சம் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்கான ஒரே மூலமாக கடலையே நம்பி இருக்கின்றனர். மீன்பிடித் தொழிலால் கடலின் சுற்றுச்சூழலியல் அதிகம் பாதிக்கப்படாமல் இருக்க இரண்டு அம்சத் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்வைத்தார். முதல் திட்டமாக, ரூ.1,520 கோடியை ஒதுக்கி, அதில், ஒவ்வொரு ஆண்டும் ரூ.10 கோடியில் மீனவர்களின் மீன்பிடி பகுதியை ஆழப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதாகும்.

இரண்டாவது திட்டம், தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான கச்சத்தீவை, கடந்த 1974-1976-ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் மூலமாக இலங்கைக்குத் தாரைவார்த்தை மீட்பதாகும். கச்சத்தீவை மீட்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்குடன் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 29 தமிழக மீனவர்களையும், அவர்களது 3 படகுகளையும் விடுவிக்க இந்திய அரசின் வெளியுறவுத் துறைக்கு உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என்று தங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.