செய்திகள்

ஆந்திராவுக்கு அமைச்சர்களை அனுப்புங்கள்: வலியுறுத்தும் கருணாநிதி

தமிழர்கள் படுகொலை பிரச்னைக்கு கடிதம் எழுதியதன் மூலம் தங்கள் கடமை முடிந்துவிட்டதாக தமிழக அரசு கருதாமல், ஆந்திராவுக்கு 2 அமைச்சர்களை அனுப்பி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆந்திராவில் 20 தமிழர்கள் கொலையைத் தொடர்ந்து மேலும் 106 தமிழர்கள் கைது செய்யப்பட்டு, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டதாகச் செய்தி வந்திருக்கிறதே?

ஆந்திராவில் இருபது தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தொடர்ந்து அதிர்ச்சியூட்டும் பல்வேறு செய்திகள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசு ஆந்திர முதல்வருக்கு இது தொடர்பாக ஒரு கடிதத்தை எழுதியதுடன் தங்கள் பணி முடிந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆந்திர மாநிலக் காவல் துறையினரோ தாங்கள் செய்த தவறை மறைக்க மேலும் பல தவறுகளைச் செய்து வருகிறார்கள்.

தமிழர்கள் கொல்லப்பட்ட இடத்தை ஆய்வு செய்வதற்காகச் சென்ற மனித உரிமை ஆர்வலர்கள் மீதும், அத்துமீறி நுழைந்ததாக வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே சிறையிலே இருந்த ஒருவரை விடுத்து, கொல்லப்பட்ட தொழிலாளர்கள் எல்லாம் செம்மரக் கடத்தல்காரர்கள் என்று கூறும்படி காவல் துறையினரே தூண்டி விட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் 63 தமிழர்களை நெல்லூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும், கடப்பா மாவட்டத்தில் 43 தமிழர்களையும் கைது செய்திருக்கிறார்கள். இதைப்பற்றி தமிழக அரசு கடிதம் எழுதியதன் மூலம் தங்கள் கடமை முடிந்து விட்டதாகக் கருதாமல், அமைச்சரவையில் உள்ள இரண்டு மூத்த அமைச்சர்களை உடனடியாக ஆந்திராவுக்கு அனுப்பி, முதலமைச்சரோடு இதைப் பற்றி விரிவாகப் பேசி இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முன் வரவேண்டும்.

“அக்ரி” கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தாலும், அது கண்துடைப்பு நடவடிக்கைதான், எதிர்க் கட்சிகளை ஏமாற்றத்தான் அந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறதே?

அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வேண்டுமானால் தப்ப வைக்கலாம்; அவரும், இந்த ஆட்சியினரும்தான் வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்குக் காரணம் என்று தமிழகம் முழுவதும் பேசிக் கொள்வதை யாராலும் மறைக்க முடியாது என்பதுதான் உண்மை.

சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கேட்பதைத் திசை மாற்றவும், சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்று யாராவது உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால், அப்போது நீதிமன்றத்தின் கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் தான் இந்தக் கைது நடவடிக்கை என்று கருதுகிறேன். இதுபோன்ற குற்ற வழக்குகளில் ஒருவர் கைது செய்யப்பட்டால், உடனடியாக அவரது வீடு, அலுவலகம் போன்றவை சோதனையிடப்படும். ஆனால் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்ட பிறகு இந்தச் சோதனை நடைபெறவில்லை.

மேலும், இதைப்போன்ற வழக்குகளில் யாராவது கைது செய்யப்பட்டால், அவர்களை உடனடியாக போலீஸ் விசாரணைக்கு எடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்படும். அதுவும் இவரது விஷயத்தில் கேட்கப்படவில்லை. மூன்றாவதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நீதிபதியிடம் ஆஜர்படுத்தியபோது, முதல் கட்ட விசாரணையின் போது, அவரிடம் பெற்ற வாக்குமூலத்தின் நகல் ஒன்றைத் தாக்கல் செய்வார்கள். அதுவும் இந்தப் பிரச்னையிலே நடந்ததாகத் தெரியவில்லை. நான்காவதாக, இவரிடம் செய்தியாளர்கள் இதைப் பற்றிக் கேட்ட போது, “எல்லாம் அம்மாவுக்குத் தெரியும்” என்றார். அதுபற்றி சி.பி., சி.ஐ.டி., விசாரணை நடத்துவோர் காதிலே போட்டுக் கொண்ட தாகவே தெரியவில்லை. இதையெல்லாம் கூட்டிப் பார்த்தால், தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை எதிர்க்கட்சிகளை ஏமாற்றுவதற்காகவே நடத்தப்பட்ட கண் துடைப்பு நாடகமாகத்தான் தெரிகிறது.

இந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒரே ஒரு முத்துக்குமாரசாமி, ஒரே ஒரு அக்ரி கிருஷ்ணமூர்த்திதானா?

அக்ரியைப் போலவே, இன்னும் அவரைவிட கூடுதலாகவே அதிகார வேட்கையோடு நடந்து கொள்ளும் அமைச்சர்கள் மேலும் பலர், இந்த அமைச்சரவையிலே உண்டு. ஐ.ஏ.எஸ்.கள் என்றும் பாராமல், அரசு அதிகாரிகள் என்றும் மதிக்காமல் நேர்மையான மனிதர்களை நித்தமும் இவர்கள் துள்ளத் துடிக்க துன்புறுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

முத்துக்குமாரசாமியைப் போல் இவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லையே தவிர, செத்துப் பிழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது ஒரு வாரப் பத்திரிகையின் செய்தியாளர் எழுதியுள்ள கட்டுரையிலே ஒரு பகுதி. ஆனால் என்னுடைய சந்தேகம், அக்ரியும் சரி, மற்ற அமைச்சர்களும் சரி, அவர்கள் அதிகாரிகளைத் துன்புறுத்தி வசூல் வேட்டையில் இறங்குவது, அவர்களுக்காக மட்டும்தானா? அடிப்படையான இந்தக் கேள்வியை யாரும் எழுப்பவில்லையே ஏன்?

வேளாண் துறை அதிகாரி செந்தில் என்பவர், “மறைந்த முத்துக்குமாரசாமியை வலியுறுத்தி, மிரட்டி பணம் வசூலிக்கும்படி அமைச்சர் கூறினார். எனவே நான் அவ்வாறு அந்த அதிகாரியை மிரட்டினேன்” என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். அந்த அதிகாரியைப் போலவே, முன்னாள் அமைச்சர் அக்ரியும் வாக்குமூலம் கொடுத்தால், முத்துக்குமாரசாமியின் சாவுக்கு உண்மையாகவே காரணமானவர்கள் உலகத்திற்குத் தெரிவார்கள் அல்லவா?

அ.தி.மு.க. ஆட்சி பற்றி?

என்னுடைய கருத்தைவிட, தமிழ் வார இதழ்களில் நம்பர்-1 என்ற அடைமொழியைத் தாங்கி வெளிவரும், “ஆனந்தவிகடன்” – “கல்கி” இதழ்களில் இந்த வாரம் என்ன எழுதப்பட்டிருக்கின்றன என்று கூறுகிறேன். “கூட்டுக் கொள்ளை நடக்கிறது. துறை ரீதியாக, மாவட்ட வாரியாக வேலை வாய்ப்புகள் பணத்துக்கு விற்கப்படுகின்றன. விதிமுறைகள் மீறப்பட்டு, தகுதியும் திறமையும் தூர வீசப்பட்டு, பணம் மட்டுமே அனைத்தையும் தீர்மானிக்கிறது. லட்சங்களில் கப்பம் வசூலிக்கிறார்கள்.

ஆசிரியர் பணி முதல் வருவாய்த் துறைப் பணி வரை ஒவ்வொரு துறைக்கும் ஒரு தொகை. பணி மாறுதல்களுக்காக நடத்தப்படும் “கவுன்சிலிங்”கூட வெறும் கண் துடைப்பாகி விட்டது. உண்மையில் இதுபோன்ற இழிவான நடைமுறைகள்தான் இந்த அரசைப் பிடித்திருக்கும் பெருநோய்களின் கிருமிகள்” என்று “ஆனந்த விகடன்” எழுதியுள்ளது. அ.தி.மு.க. அரசுக்கு இதைவிட வேறு சான்றிதழ் வேண்டுமா என்ன?

அரசு அலுவலர்களின் தற்கொலை தொடருகிறதே?

உண்மைதான்! இரண்டு நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள சத்துணவுப் பிரிவு அலுவலகத்தில் சண்முகவேல் என்ற அரசு அலுவலர், மின் விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்தத் தற்கொலைக்குப் பின்னால் உள்ள உண்மைகள் இனிதான் வெளிவரும்.

தேனாம்பேட்டை போக்குவரத்துக் காவல் நிலையத்திலேயே 7 வாக்கி டாக்கி கருவிகள் திருட்டுப் போய் விட்டதாமே?

அ.தி.மு.க. ஆட்சியில் எந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக (?) பராமரிக்கப்படுகிறது என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.

இவ்வாறு கூறி உள்ளார்.