செய்திகள்

ஆபிரிக்க நாடுகளில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் செயற்பாடுகள் ஈழத்தமிழருக்குக் கற்றுத்தரும் பாடங்கள்

சிவா செல்லையா

கடந்த 50 வருடகாலத்தில் உலகின் மனிதகுல வரலாற்றில் பாரிய இனப்படுகொலைகள் வெவ்வேறு நாடுகளில் நடந்தேறி உள்ளன. அவ்வினப் படுகொலைகள் ஆட்சியாளர்கள் தமது நலனுக்காக மேற்கொள்ளப்பட்டவை. ரூவண்டா, தென்ஆபிரிக்கா, கென்யா, உகண்டா, லிபியா, சூடான் ஆகிய நாடுகளில் நடந்த இனப்படுகொலைகள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளும், நீதி வழங்கலில் ஏற்பட்ட தாமதங்களும் ஈழத்தமிழர்களுக்குப் பாதிய நம்பிக்கையீனத்தை இந்த உலகில் ஏற்படுத்தி உள்ளது.

வளம்மிக்க நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதற்காகவும், நவீன காலணித்துவ மேலாண்மையை விருத்தி செய்வதற்காகவும், உலக வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியில் அகப்பட்டே சிறுபான்மை இனங்கள் ஆட்சியாளர்களால் இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டமையை ஆபிரிக்கக் கண்டத்தில் கண்கூடாகக் காணலாம்.

இனப்படுகொலைக்குப் பின்பான சமூகத்தில் உலக வல்லரசுகள் நிலைமாறு நீதி, நல்லிணக்கம் என்ற பெயரில் காலூன்றுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இனப்படுகொலைக்குப் பின்பான இத்தகைய நிலைமாறு நீதி, நல்லிணக்கச் செயற்பாடுகளில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக அமைவன :

(1) நாடு சார்ந்த காரணிகள்.
(2) நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஒத்துழைப்புக் காரணிகள்.
(3) சனநாயகத்தை நிலைநாட்டுவதிலுள்ள தடைகள்.
(4) சட்டத்தை அமுல்படுத்துவதிலுள்ள சிக்கல்கள்.
(5) பிரதேசவாதம்.
(6) அரசியல் கூட்டுக்கள் .

ஆபிரிக்க நாடுகளில் இனப்படுகொலைச் சம்பவங்களுக்கு பின்னணியில் ஆட்சியாளர்களுக்கு உலக வல்லரசுகள் ஆதரவு வழங்கியமை புலனாகின்றது. குறிப்பாக ஆபிரிக்காக் கண்டத்தில் சீனாவின் தடம்பதிப்பு இனப்படுகொலைகளின் நிழலிலேயே நிகழ்ந்து உள்ளது. சீனா உலகின் முதல்நிலை வல்லரசாகும் முதலீடு. ஆபிரிக்காக் கண்டத்தின் பல இனப்படுகொலைகளுக்கு காரணமாக அமைந்து உள்ளது. இவ் இனப்படுகொலைகளுக்கான நீதி வழங்கலில் நாடுசார்ந்த காரணிகள், நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக் காரணிகளான ஆபிரிக்க ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, சீனப் பொருளாதார ஒத்துழைப்பு என்பன செல்வாக்குச் செலுத்தி உள்ளன. இதனால் இடைக்கால நீதி வழங்கும் பொறிமுறை பல தசாப்தங்கள் பின்னோக்கித் தள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டனை பெறுதலில் இருந்து தப்பி உள்ளனர்.

குற்றவியல் நீதிமன்றத் தீர்ப்புக்களை நடைமுறைப்படுத்துவதில் பாதிப்படைந்த மக்கள் வாழும் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதிலுள்ள தடைகள், சட்டத்தை அமுல்படுத்துவதிலுள்ள சிரமங்கள், பிரதேச வாதம், அரசியல் கூட்டுக்கள் என்பன தடையாக ஆபிரிக்க நாடுகளில் அமைந்தமை கண்டறியப்பட்டு உள்ளது.

ஆசியாக்கண்டத்திலும், சீனாவின் பட்டுப்பாதை நிகழ்ச்சித் திட்டத்தின் முதலீடாகவே இலங்கை, மியான்மார் ஆகிய நாடுகளில் பாரிய இனப்படுகொலைகள் நிகழ்ந்து உள்ளன. இதில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை இனம் மீண்டெழ முடியாதவாறு ஆபிரிக்காக் கண்டத்தில் நிகழ்வது போல் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் நிகழ்ந்த வண்ணமே உள்ளது.

கடந்தகாலத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைகளுக்கு அப்பால் தற்போது தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகளே சிறுபான்மை இனத்தை அடையாளம் தெரியாது அழிக்கும். இலங்கை அரசு சீன அரசின் பொருளாதார நிகழ்ச்சித் திட்டத்தில் தனது இன மேலாண்மையைக் காட்டுகின்றது. எனவே ஈழத்தமிழர் தமிழக மக்களுடனான போக்குவரத்து, பொருளாதாரம், கலாச்சாரத் தொடர்புகளை வலுப்படுத்துவதனாலேயே இலங்கையில் தமது இருப்பினைக் காத்துக்கொள்ள முடியும்.

சர்வதேச நீதி விசாரணை நியமங்கள் யாவும் வல்லரசுகளின் நிகழ்ச்சிநிரலின் அடிப்படையிலேயே அமையும். ஒரு வல்லரசு நிலைமாறு நீதி என்ற போர்வையிலும், மறு வல்லரசு நல்லிணக்கம் என்ற போர்வையிலும் தமது நலன்களைக் கவனிக்க இங்கு கடட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.

தமிழ் அரசியல் கட்சிகள் வெறுமனே தமது அரசியல் இருப்பிற்கான நிகழ்ச்சிநிரலில் செயற்படாது தமிழின இருப்பினை இலங்கையில் நிலைபெறச் செய்வதற்கான செயற்பாட்டில் தலைப்படல் வேண்டும்.