செய்திகள்

ஆயிரக்கணக்கான மக்கள் “இலண்டன் தமிழர் சந்தை” நிகழ்வில் பங்கேற்பு

கடந்த வருடம் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்த பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் “இலண்டன் தமிழர் சந்தை” நிகழ்வு இவ்வாண்டும் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது.

கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் Harrow Leisure Centre இல் நடைபெற்ற இந்த நிகழ்வை ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டார்கள்.

இந்த நிகழ்வின் முதல் நாளன்று வீடியோ மூலம் உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் வர்த்தக மற்றும் வியாபர செயற்பாடுகள் நிறுவன ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டு செயற்படுத்தப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் இதன் மூலம் தாயக மக்களின் சுபீட்சத்துக்கு அவர்கள் பெரிதும் உதவ முடியும் என்றும் கூறினார்.

” உலக நாடுகள் எங்கும் வாழுகின்ற தமிழ் மக்களின் வர்த்தக முயற்சிகள் நிறுவனமயப்படுத்தப்பட்டு செயற்படுகின்றபோதுதான் அவை தாயகத்திலே தமிழ் மக்களுக்கு அவர்களின் சமூக, பொருளாதார அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு மட்டுமன்றி அரசியல் அபிலாஷகளை வெற்றிகொள்வதற்குமான ஒரு பெரும் பலமாக அமைய முடியும். உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களின் வர்த்தக வாணிப செயற்பாடுகள் இவ்வாறு கட்டமைப்பு வடிவம் பெற்று யுத்தத்திலே சின்னாபின்னப்பட்டுப்போயுள்ள தாயக உறவுகளுக்கான ‘உதவும் கரங்களாக’ பரிணமித்திருக்குமானால் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ‘பீனிக்ஸ்’ பறவை போல நாம் என்றோ மீண்டு எழுந்து பறந்திருப்போம். எனினும் உதவி பெறுவதிலும் நாம் தடைகளை எதிர்நோக்கி இருந்தோம். அக் காலம் போய் உதவிகளை உதவிகளை தடை இன்றி பெறக் கூடிய காலம் விரைவில் வர இருக்கின்றது என்று நம்புகிறோம்” என்று முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வை லண்டன் ஹரோ நகர பிதா சுரேஷ் கிருஷ்ணா ஆரம்பித்து வைத்தார். பிரித்தானியாவின் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றி இருந்தார்கள்.

இந்த நிகழ்வு குறித்து கருது தெரிவித்த பிரித்தானிய தமிழர் சம்மேளனத்தின் தலைவர் திருவாசகம், எதிர்பார்த்தபடியே இம்முறையும் இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது என்றும் அடுத்த வருடம் மேலும் பல புதிய பரிமானகளுடன் பிரம்மாண்டமான அளவில் இதனை நடத்த இருப்பதாக கூறினார்.

இவ்வருட நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய நிறுவனகள் அனைத்துக்கும் நன்றியை தெரிவித்த அவர், பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் பிரித்தானியா மற்றும் தாயகத்தில் முன்னெடுக்க இருக்கின்ற செயற்திட்டங்களுக்கு இந்த நிறுவனங்களின் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

” IBC மற்றும் ஏனைய ஊடக நிறுவனகளின் அனுசரணை மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. ரூபி உணவு நிறுவனத்தினால் வழங்கப்பட்ட உணவு பணத்துக்கு ஏற்ப பெறுமதியானதாகவும் அனைவருக்கும் திருப்பதி அளிக்கும் வகையிலும் இருந்தது. ராகா இசைக்குழுவினரின் இசையும் பிரபல தென் இந்திய பாடகர் ஹரிஹரசுதனின் பாடல்களும் அனைவரையும் மகிழவைத்து. அத்துடன் பாஷன் ஷோ , நாடகங்கள், ஆடல் நிகழ்வுகள் அனைத்துமே பார்வையாளர்களை பெரிதும் கவரும் வகையில் அமைந்திருந்தது. நிகழ்வில் கலந்து கொண்ட வர்த்தக முயற்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் கருத்துக்கள் எமக்கு திருப்தியளிக்கும்வகையில் அமைந்திருந்தது. பிரித்தானியாவில் தமிழ் மக்களின் வரத்தக முயற்சிகள் எழுச்சியுடன் பெரும் வளர்ச்சி கண்டு வருவதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த கண்காட்சி அமைந்திருந்தது ” என்று திருவாசகம் கூறினார்.

சுமார் 150க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமது பொருட்களையும் சேவைகளையும் காட்சிப்படுத்தி இருந்தன.

அத்துடன் ஆடல், பாடல், வேடிக்கை நிகழ்வுகள், வினோத நிகழ்வுகள், ஆடை-அலங்கார காட்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் பல்வேறு நிகழ்வுகள் இரு தினங்களும் தொடர்ச்சியாக நடைபெற்றன.

பிரித்தானிய வர்த்தக சம்மேளனம் ‘நாச்சியார்’ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து இந்த நிகழ்வை நடத்தி இருந்தது.