செய்திகள்

ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வெற்றியை கொண்டாடிய தருணம்

நாங்கள் மீண்டும் வலுவாக திரும்பி வருவோம். அதற்குத்தான் நாங்கள் அறியப்பட்டிருக்கிறோம்”ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக பிளே ஆஃப் வாய்ப்புக்குத் தகுதி பெறாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேறிய பின்னர் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி கூறிய செய்தி இது.கிட்டதட்ட 11 மாதங்களுக்கு பிறகு அந்த வாக்கியத்தை உண்மையாக்கி இருக்கிறது தோனி தலைமையிலான மஞ்சள் ராணுவம்.வெறும் வெற்றி அல்ல, லீக் சுற்றில் நேர்த்தியாக விளையாடி பிளே ஆஃபில் நுழைந்தது போல ஐபிஎல் 2021 சீசன் இறுதிப்போட்டியிலும் வென்று சாதித்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

193 ரன்கள் எனும் சவாலான இலக்கை நிர்ணயித்திருந்தாலும் சென்னை ரசிகர்களின் இதயதுடிப்பு ஒன்றும் சீராக இல்லை. அதற்கு காரணம் வெங்கடேஷ் அய்யரும், சுப்மன் கில்லும் தான்.தீபக் சாஹர் முயற்சித்துப் பார்த்தார் முடியவில்லை, ஹாசில்வுட்டுக்கும் பலன் கிடைக்கவில்லை; பிராவோவால் ரன்களை மட்டுமே கட்டுப்படுத்த முடிந்தது, விக்கெட்டுகள் விழவில்லை, ஜடேஜாவின் ஓவர்களை இருவரும் சேர்ந்து வெளுத்து வாங்கியிருந்தார்கள்.பத்து ஓவர்களாகியும் இந்த இருவரையும் பிரிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது ஒன்பதாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த சென்னை.

அப்போது தனது இரண்டாவது ஓவரை வீச வந்தார் ஷர்துல் தாக்கூர். அதுவரை கொல்கத்தாவுக்கு ‘ஹீரோ இன்னிங்ஸ்’ விளையாடிக் கொண்டிருந்த வெங்கடேஷ் அய்யரை பெவிலியனுக்கு அனுப்பினார். அதில் ஜடேஜாவுக்கும் பெரும் பங்குண்டு.அதே ஓவரில் நிதிஷ் ராணாவையும் வெளியேற்றி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார் ஷர்த்துல். மூன்றே பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள். அந்த புள்ளியில் ஆட்டம் சென்னை பக்கம் நகர்ந்தது. அதன் பின் கொல்கத்தாவின் ஆட்டம் எடுபடவில்லை.

கொல்கத்தா அணி இந்த ஐபிஎல் சீசனில் இந்தியாவில் நடந்த முதல் பாதி தொடரில் கீழ் வரிசையில் இருந்தது. முதல் ஏழு போட்டிகளின் முடிவில் இரண்டில் மட்டுமே வென்று பிளே ஆஃப் வாய்ப்பையே சிக்கலாக்கிக் கொண்டிருந்தது. ஆனால் சென்னை அணியோ ஏழு போட்டிகளில் இரண்டில் மட்டுமே தோற்று பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசமாக வைத்திருந்தது.

துபாய் மண்ணில் நடந்த இரண்டாவது பாதியில் கொல்கத்தா ஆடிய ஆட்டம், ஐபிஎல் வரலாற்றின் ‘சிறந்த மீண்டெழுதலில்’ நிச்சயம் சேர்க்கப்படவேண்டிய ஒன்று.புள்ளிப்பட்டியலில் சாவகாசமாக முதல் இரண்டு இடங்களில் சென்னை அமர்ந்திருக்க, ஒவ்வொரு போட்டியும் வாழ்வா சாவா என்ற நிலையில் விளையாடி, ஐந்து முறை சாம்பியன் மும்பையை வெளியேற்றி அதிரடியாய் பிளே ஆஃபுக்குள் நுழைந்தது கொல்கத்தா.ஆனால், புள்ளிபட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்குள் நுழைவது என்பது சாதாரண விஷயமல்ல. அதிக அழுத்தம் நிறைந்த பிளே ஆஃப் சுற்றில் பெங்களூரு, டெல்லி என இரு வலுவான அணிகளையும் கடைசி ஓவர்களில் வென்று முடித்து சென்னையுடன் மோத தயாரானது கொல்கத்தா.

ஹாட்ரிக் கோப்பையை தடுப்பது, 2012-ம் ஆண்டு சீசனை நினைவுபடுத்தும் ஆட்டம், ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் தோல்வியையே தழுவாத அணி, 180 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை ஐபிஎல் இறுதிப்போட்டியில் இருமுறை சேஸிங் செய்த ஒரே அணி எனும் பெருமையுடன் கொல்கத்தா இறுதிப் போட்டியில் சென்னையுடன் மோதத் தயாரானது.

சென்னைக்கும் சரி, கொல்கத்தாவுக்கு சரி நியூசிலாந்து வீரர்கள் தான் பயிற்சியாளர்கள். ஆனால் ஒருவர் அதிரடி அக்ரஸிவ் பாணிக்கு பெயர் பெற்றவர். அவர் பிரண்டன் மெக்குல்லம். அவர் முன்னாள் சிஎஸ்கே பிளேயரும் கூட.மற்றொருவர் அனுபவம் வாய்ந்த செயல்முறையில் பெரும் நம்பிக்கை கொண்ட ஸ்டீஃபன் ஃபிளமிங். இவர் சென்னை அணியின் பயிற்சியாளர்.கொல்கத்தா அணியின் கேப்டனும் சரி, சென்னை அணியின் கேப்டனும் சரி தத்தமது அணிக்கு உலக கோப்பை கனவுகளை நனவாக்கியவர்கள்.(15)