செய்திகள்

ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தொடங்கி ரூ.100 கோடி வசூலை எட்டிய சிவகார்த்திகேயன் கதை

சின்னத்திரை பிரபலங்களுக்கு வெள்ளித்திரை அவ்வளவு சுலபம் கிடையாது. சின்னத்திரை போல பெரிய திரையில் ஜொலிக்க முடியாது என்ற கூற்றெல்லாம் பொய்யாக்கியவர்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர்.’கலக்க போவது யாரு?’ நிகழ்ச்சியில் போட்டியாளராக தனது பயணத்தைத் தொடங்கியவர் இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகர்களில் ஒருவர். தனது 37-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சிவகார்த்திகேயன் குறித்தான சில சுவையான தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கல்லூரி படிக்கும் காலத்திலேயே மிமிக்ரி கலைஞனாக மேடை ஏறியவருக்கு கிடைத்த முதல் சம்பளம் ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.காவல் துறை அதிகாரியான அப்பா இறந்த பிறகு அம்மாவும், அக்காவும் குடும்பத்தை பார்த்து கொண்டதால் அவர்கள் மீது அதீத மரியாதையும் அன்பும் எப்போதும் சிவகார்த்திகேயனுக்கு உண்டு. அதிலும் அக்கா என்றால் பயம் கலந்த மரியாதை உண்டு.மகள் ஆராதனா பிறக்கும் சமயம். மனைவி ஆர்த்தி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டு சிவகார்த்திகேயன் காரில் கிளம்ப அப்போது எஃப்.எம்.மில் கேட்ட பாடல் ‘தங்க மீன்கள்’ படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’. அதனால் எப்போதுமே அந்த பாடல் தனக்கு ஸ்பெஷல் என்பார்.காமெடி ரியாலிட்டி நிகழ்ச்சியின் போட்டியாளராக, தொகுப்பாளராக இருந்து சினிமாவில் நடிகராக காலடி எடுத்து வைத்தவர் இன்று தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என சினிமாவில் தனக்கான இடத்தை அழுத்தமாக பிடித்திருக்கிறார்.

இதுவரை சிவகார்த்திகேயன் தயாரித்த படங்களின் எண்ணிக்கை ஐந்து. அதேபோல, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’, ‘காக்கிச்சட்டை’ தொடங்கி கடைசியாக கவின் நடிப்பில் வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் என மொத்தம் பத்து படங்களில் பாடியிருக்கிறார்.வர்த்தக சினிமாவுக்காகவோ தன் படங்களை தயாரிப்பதற்கு ஏற்ற சூழலில்தான் பெரும்பாலும் சினிமாவில் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் ஆகி கொண்டிருக்க, தன் நண்பர் அருண்ராஜா காமராஜா இயக்குநரான முதல் படமான ‘கனா’வை தயாரித்தும் அந்த படத்தில் நடித்தும் நண்பரின் கனவை நிறைவேற்றினார் சிவகார்த்திகேயன்.

இன்னொரு பக்கம் பாடலாசிரியராகவும் ஹிட் பாடல்களை எழுதி இருக்கிறார். சமீபத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் அனிருத் இசையில் இவர் எழுதிய ‘ஹலமதி ஹபிபோ’ பாடல் தான் இப்போது இணையத்தில் ட்ரெண்டிங். சிவகார்த்திகேயன் தான் எழுதும் பாடல்களுக்கு வரும் வருமானத்தை மறைந்த கவிஞர் நா. முத்துக்குமார் குடும்பத்திற்கு கொடுத்து உதவி வருகிறார் என்பது சமீபத்திய செய்தி. சிவகார்த்திகேயனின் ஆரம்பகால படங்களான ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்’ பாடலை எழுதியவர் நா. முத்துக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் பாண்டிராஜ் மீது எப்போதுமே தனிப்பட்ட மரியாதை சிவகார்த்திகேயனுக்கு உண்டு. சமீபத்தில் சினிமாவுக்குள் நுழைந்து பத்து வருடங்கள் நிறைவடைந்ததை ஒட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘எனக்கு முதல் பட வாய்ப்பளித்த இயக்குநர் பாண்டிராஜூக்கு நன்றி’ என்று தான் அந்த அறிக்கை தொடங்கி இருக்கும்.கிரிக்கெட் மற்றும் கால்பந்து இவருக்கு மிக பிடித்த விளையாட்டு.மிக பிடித்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். அடுத்து வெளிவர இருக்கும் ‘அயலான்’ படத்தில் ரஹ்மான் இசையில் தான் பாடியிருப்பது தன் வாழ்வில் மறக்க முடியாத விஷயம் என்பார்.

மிஸ்டர். லோக்கல்’ படம் வணிக ரீதியாக வரவேற்பு பெறாத சமயம். இந்த படத்தின் வியாபார ரீதியிலான தோல்வி குறித்து சிவகார்த்திகேயன் விழா மேடை ஒன்றில் பேசியிருந்தார். ‘சினிமா என்பதே ஒரு விளையாட்டு தான். இங்கு தோற்பதும் ஜெயிப்பதும் மாறி மாறி நடக்கும். தோற்றால் விளையாட்டு தான் முடியுமே தவிர வாழ்க்கை அல்ல; அதுபோல தான் சினிமாவில் படங்களின் வெற்றியும் தோல்வியும். இனிமேல் ரசிகர்களை ஏமாற்றாமல், என் தயாரிப்பாளர்களுக்கு இலாபம் தரும் படங்களில் நடிப்பதை கவனத்தில் வைத்திருப்பேன்’ என்றவர் அடுத்தடுத்த நடித்த ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘டாக்டர்’ என வசூல் ரீதியிலான வெற்றி படங்களையும் கொடுத்தார்.

இதில் கொரோனா காலத்தில் திரையரங்குகளில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதியிலேயே 100 கோடி வசூல் செய்தது என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.’டாக்டர்’ படத்திற்கு பிறகு ‘டான்’, ‘அயலான்’, நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக இருக்கிறது. இதில் சிவகார்த்திகேயனின் தெலுங்கில் ‘ஜதிரத்னலு’ படத்தை கொடுத்த இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் அடுத்து தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார். சிவகார்த்திகேயன் தெலுங்கில் நேரடியாக நடிக்கும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தமிழ் பதிப்பில் இயக்குநர் வெங்கட்பிரபு பணியாற்ற இருக்கிறார்.சமீபத்தில் இந்த படத்தின் பூஜை தொடங்கி காரைக்குடியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சத்யராஜ் பிரேம்ஜி உள்ளிட்டோர் இதில் நடிக்கின்றனர். இதில் ஹாலிவுட் நாயகியான மரியா ரியாபோஷாப்கே நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.(15)