செய்திகள்

ஆயுதக்களஞ்சிய விவகாரம்: கோதாபாவை குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரிக்கும்

ஆயுதக்களஞ்சிய விவகாரம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிடம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் மற்றும் காலி கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஆகியனவற்றில் காணப்பட்ட பாரியளவிலான ஆயுதங்கள் தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது.

அவன்ட் க்ரேட் என்னும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தினால் பயன்படுத்தப்பட்டு வந்த சில வகை ஆயுதங்கள் யுத்த காலத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுபவை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த ஆயுதங்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணைகள் சற்று சிக்கல் நிறைந்தது எனவும், சர்வதேச ரீதியில் விசாரணை நடத்தப்பட வேண்டியேற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.