செய்திகள்

ஆர்ப்பாட்டத்தால் ஏற்படும் அசௌகர்யங்களைத் தடுக்க நீதிமன்றம் உத்தரவு

ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெறும் போது மக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை தடுக்கக்கூடிய வேலை திட்டமொன்றை தயார்படுத்துமாறு காவல்துறையினருக்கு கொழும்பு மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் செயத் அல் ஹுசெய்ன் இலங்கைக்கு விஜயம் செய்த போது கொழும்பில் அமைந்துள்ள ஐ.நாவின் காரியாலயம் முன்பாக ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது.

வீதிகளை வழிமறைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த போராட்டத்தின் காரணமாக மக்களுக்கு பெரும் அசவுகரியம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் விரவன்ஷ உள்ளிட்ட எழு நபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின்போதே பிரதான நீதிவான் கிஹான் பிளபிடிய இதனை தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பொது மக்கள் பெரும் அசவுகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக கூறிய நீதிபதி நேற்றும் நேற்று முன் தினமும் இந்த நிலை காணப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த மூத்த காவல்துறை அதிகாரி அஜித ரோகன, நேற்றும் நேற்று முன்தினமும் நடத்தப்பட்ட பேரணிகள் காவல்துறையின் அனுமதியுடன் நடந்ததாகவும் விமல் விரவன்ஷ குழுவினரால் நடத்தப்பட்ட பேரணிகளுக்கு காவல்துறை அனுமதி பெறப்படவில்லை எனத் தெரிவித்தார்.

காவல்துறையின் அனுமதியைப் பெறாமல் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது சட்டத்தை மீறும் செயலென்றும் சிரேஷ்ட போலிஸ் அதிகாரி அஜித ரோகன தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விமல் வீரவன்ஷ உள்ளிட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்ட்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விமல் வீரவன்ஷ, நேற்று முன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள் கொழுப்பு லிப்டன் சந்தியில் வீதிகளை வழிமறைத்து ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தியதாக தெரிவித்த விமல் விரவ்ன்ஷ, இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தவறியுள்ளதாக குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கின் விசாரணை ஜூன் 3 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

n10