செய்திகள்

ஆறறிவு படைத்தென்ன ?! அண்டத்தை அறிந்தென்ன ..?!

ஆறறிவு படைத்தென்ன ?!
அண்டத்தை அறிந்தென்ன ..?!
நூலறிவு பலவிருந்தும் ;
நுண்ணுயிரைக் அழிப்பதற்கு
யாரறிவும் போதவில்லை !
பேரழிவு பேரழிவு -மனச்
சோர்வு தரும் பெருந்துயரப் பேரழிவு !

நீர்மூழ்கிக்கலங்கள் என்ன ..
நெடுந்தூரக் கணைகள் என்ன …
போரென்று வந்தால் தம் நாட்டுப்
பெயர் சொல்லி அடிக்க
படைக்கலங்கள் பலதென்ன  ;
வானூர்திகள் அதிலும்  வகை வகையாய்
தாம் வல்லரசு நாடுகளாம்-இதற்கும் மேல்
பார் சுற்றி பகலிரவாய் உளவறிய செய்கோள்கள்

ஈர்ப்புவிசை,  கூர்ப்பு விதி என
அறிவியலில் பலபடிகள் தாண்டி
அகலக்கால் பதிக்கையிலே….
அறைந்தது மனிதவினம் இயற்கையின் கன்னத்தில் அதுவோ
மறுகன்னத்தை  காட்டவில்லை -மாறாக
திருப்பி அறைந்த போது வலிக்கிறது;
மரண ஓலங்களாய்- இன்னும் மாறவில்லை!

-பிறேமலதா பஞ்சாட்சரம்