செய்திகள்

ஆறு இலட்சம் இந்து சமய மாணவர்களில் ஒரு இலட்சம் பேரே இந்து சமய கல்வியை கற்கின்றனர்

இலங்கையில் ஆறு இலட்சம் இந்து சமய மாணவர்கள் உள்ளபோதிலும் ஒரு இலட்சம் மாணவர்களே இந்துசமய கல்வியை கற்றுக்கொள்வதாக இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.

ஏனைய சமயங்களுடன் ஒப்பிடும்போது இந்து சமய மாணவர்கள் குறைந்தளவிலேயே தான்சார்ந்த சமயம் தொடர்பாக கற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்துக்கலாசார அமைச்சும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடுசெய்த அறநெறிக்கல்வித்திட்ட அறிமுகம் மற்றும் புதிய பாடத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.

இந்துக்கலாசார அமைச்சும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து இந்த கலந்துரையாடலை மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுரை மண்டபத்தில் நடாத்தியது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 30வருடத்தினை கடந்துள்ளது. திணைக்களத்தின் அனுசரணையுடன் அறநெறிப்பாடசாலைகள் அமைக்கப்பட்டு 25ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினை ஆரம்பித்த முன்னாள் அமைச்சர் இராஜதுரை ஐயா அவர்களின் பெயரையுடைய மண்டபத்தில் இந்த நிகழ்வினை நடாத்துவதையிட்டு எமது திணைக்களம் பெருமைகொள்கின்றது.

ஐந்து செயற்றிட்டங்களை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டுவருகின்றது. அறநெறிக்கல்வி, இந்து ஆலயங்களின் வளர்ச்சி, இந்துமதவிவகாரம், ஆராய்ச்சி உட்பட ஐந்து செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதில் மிகமுக்கியமானதாக இந்து அறநெறிக்கல்வி அபிவிருத்தி கொள்ளப்படுகின்றது.

இந்து அறநெறிக்கல்வி அபிவிருத்தி அடைந்த மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் முதன்மைபெறுகின்றது. இலங்கையில் முதல் ஐந்து மாவட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டம் விளங்குகின்றது.

அறநெறிப்பாடசாலைக்கல்வியை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது இலங்கை முழுவதும் ஆறு இலட்சம் இந்து சிறார்கள் இந்து அறநெறிப்பாடசாலைகளுக்கு செல்லவேண்டும். ஆனால் சுமார் ஒரு இலட்சம் சிறார்களே இந்து அறநெறிப்பாடசாலைக்கு செல்கின்றனர். 20வீதத்துக்கும் குறைவானவர்களே இந்துசமய கல்வியைப்பெற்றுக்கொள்கின்றனர். இருந்தபோதிலும் ஒப்பீட்டு ரீதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 30வீதத்துக்கு அதிகமான மாணவர்கள் அறநெறிப்பாடசாலைக்கு செல்கின்றனர்.

இலங்கையில் ஏனைய சமயங்களில் உள்ள மாணவர்கள் தாம் சார்ந்த அறநெறி பாடசாலைகளுக்கு செல்லும் வீததத்தினை விட இந்து சமய மாணவர்களின் தொகையானது மிகவும் குறைந்த நிலையிலேயே உள்ளது.

இதற்கான காரணம் கடந்த காலத்தில் இந்த நாட்டில் இருந்த மிகமோசமான சூழலாகும். இந்துமக்கள் செறிவாக வாழ்ந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பல்வேறு பிரச்சினைகள் காரணமாகவும் இந்து அறநெறிப்பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் வீதம் குறைவாக காணப்படுகின்றது.

இருந்தபோதிலும் அறநெறிக்கல்வி திட்டமிட்டவகையில் ஒருங்கமைக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. அதனை மேம்படுத்தவேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. தற்போது 20வீதமாகவுள்ள இந்து அறநெறிப்பாடசாலைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையினை எதிர்வரும் சில ஆண்டுகளில் 60வீதத்துக்கு மேல் அதிகரிக்கவேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. ஏனைய மதங்களின் அறநெறிப்பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 70வீதத்துக்கும் மேலாக உள்ளது.

அதற்கமைய இந்துசமய அறநெறிக்கல்வியை மேம்படுத்தும் வகையில் மீள்பாட புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. பாடவிதான மீளமைப்பு என்றதும் சிலர் பாட புத்தகத்தினையே கருத்தில்கொள்கின்றனர். அதுமட்டுமன்றி பல்வேறு செயற்பாடுகளை அதுகொண்டுள்ளது. இதன் ஒரு அங்கமே கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய ஆக்கத்திறன் விருதுகூட இந்த பாடத்திட்டத்தின் ஓரு அம்சமாகும். அதுபோல் பல்வேறு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குருபூசை நிகழ்வுகளை நாடுமுழுவதும் உள்ள அறநெறிப்பாடசாலைகளில் ஒரு விழாவாக செய்யவேண்டிய செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

N5