செய்திகள்

ஆறு மாதத்தில் 71 பத்திரிகையாளர்கள் படுகொலை

2015 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 71 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது. பிரஸ் எம்பளம் கேம்பைன்(PEC) என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகின் 24 நாடுகளில் 2015 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 71 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.  பத்திரிகையாளர்கள் படுகொலை சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 7 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

பிரான்ஸ், லிபியா மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளில் பத்திரிகையாளர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏமன், லிபியா, ஈராக், சிரியா, தெற்கு சூடான் மற்றும் உக்கரைனில் நடைபெற்ற சண்டையின் போது 17 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். லத்தீன் அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள போர்ப்பகுதியில் 30 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகள் பத்திரிகையாளர்களுக்கு ஆபத்து மிகுந்த நாடுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.