செய்திகள்

ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தா தளபதி மரணம்

யேமனில் தீவிரவாதிகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தா தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஆளில்லா விமானத் தாக்குதலை அமெரிக்கா நிகழ்த்தியது என கருதப்படுகிறது. யேமனில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தி வரும் ஒரே நாடு அமெரிக்கா. எனினும் அவற்றைக் குறித்த விரிவான விவரங்களை அமெரிக்கா வெளியிடுவதில்லை.

இந்த தாக்குதல் குறித்து யேமன் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் மத்திய யேமன் பகுதியில் அல-காய்தாவினரின் தளபதியாகச் செயல்பட்டு வரும் ஷெüகி அல்-பாதனி கொல்லப்பட்டார்.

இவர் கெüலான் அல்-சனானி என்றும் அபு மைசாரா அல்-ஹன்கி என்றும் அறியப்படுகிறார்.

அரபு தீபகற்ப அல்-காய்தா (ஏ.க்யூ.ஏ.பி.) பிரிவைச் சேர்ந்தவரான இவர், அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தார். யேமன் தலைநகர் சனாவில் 2012-இல் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பின்போது நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பின் பின்னணியில் இருந்தவர் இவர். அந்த குண்டு வெடிப்பில் 100 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று அந்த வட்டாரங்கள்

தெரிவித்தன.

முன்னதாக, யேமனின் ராடா பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆளில்லா விமானத் தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.