செய்திகள்

ஆளுநர் உறுதி மொழியை அடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்: ஒன்றியத்தின் தலைவர்

வடமாகாண ஆளுநர் முதலமைச்சருடன் கலந்துரையாடி எங்களுக்கொரு தீர்வினைப் பெற்றுத் தருவார் எனும் நம்பிக்கையில் தான் எங்களுடைய போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டிருக்கிறோம்: தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியத்தின் தலைவர்.

முதலமைச்சர் உண்ணாவிரதமிருக்குமிடத்தில் வந்து நேற்றுக் கதைத்த போது எங்களுடைய எல்லாக் கோரிக்கைகளையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. சில கோரிக்கைகளைத் தான் பரிசீலித்துப் பதில் தருவதாக மாத்திரமே கூறியிருந்தார். அந்த ரீதியில் தான் நாங்கள் முதலமைச்சரின் உறுதிமொழிகளை நேற்றைய தினம்; ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பின்னர் கடிதம் மூலமாக எமது சில கோரிக்கைகளை ஏற்பதாகத் தெரிவித்தார். இதிலும் சில முரண்பாடுகள் எழுந்தன. ஆனால் வடமாகாண ஆளுநர் அவர்கள் எங்களுடைய சகல கோரிக்கைகளையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும், முதலமைச்சருடனும் எங்களுடனும் கலந்துரையாடி ஒரு தீர்வினை முன்வைப்பதாகவும் வாக்குறுதியளித்திருந்தார். அந்த அடிப்படையில் ஆளுநர் வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடி இருவரும் இணைந்து எங்களுக்கொரு தீர்வினைத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் தான் எங்களுடைய போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டிருக்கின்றோம். இவ்வாறு தெரிவித்தார் தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியத்தின் தலைவரும், பொறியியலாளருமான ந.நந்தரூபன்.

சுத்தமான நீருக்கான உரிமையை உறுதி செய்யக் கோரியும், யாழ்ப்பாண நிலத்தடி நீரில் கழிவெண்ணெய் கலந்து ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் தீர்க்கமான பதிலொன்றை வெளியிடக் கோரியும் மாணவர்கள் எட்டுப் பேர் இணைந்து நேற்று நல்லூர் ஆலய முன்றலில் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் மாகாண அமைச்சர்கள் நேற்றிரவு நேரில் சென்று பார்வையிட்டு உறுதிமொழிகள் சிலவற்றை வழங்கிப் போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தியும் அவர்களின் உறுதி மொழிகளை ஏற்க மறுத்த நிலையில் இன்றைய தினமும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த நிலையில் இன்று மாலை வடமாகாண ஆளுநர் வழங்கிய தெளிவானதொரு உறுதிமொழியின் அடிப்படையில் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாகக் கேட்ட போதே ந.நந்தரூபன் எமது செய்திச் சேவைக்கு இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வலிகாமம் பகுதியில் காணப்படும் நீர்ப் பிரச்சினை முக்கியதொரு பிரச்சினையாக இருந்து வரும் நிலையில் நேற்றிரவு வருகைதந்த வடமாகாண சபை விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் எங்களுடன் எமது பிரச்சினை தொடர்பில் கதைக்காதது மிகவும் மனவருத்தத்தைத் தருகிறது. இதனையொரு முக்கிய பிரச்சினையாக அவர்கள் கருதவில்லை என்றதொரு எண்ணப்பாட்டைத் தோற்றுவித்தது. ஆனாலும் எங்களுடன் தொடர்ச்சியாக அவர்கள் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டிருந்த நிலையிலும் இதற்கான தீர்வு இழுபட்டுக் கொண்டு சென்றது.

இவ்வாறான சூழ்நிலையில் உண்ணாவிரதமிருந்த மாணவர்களின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து சென்றது. அந்த நிலையில் நேற்றிரவு ஒரு மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலையும் மூன்று மாணவர்களின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மேலும் நான்கு மாணவர்களின் உடல்நிலை மோசமாகப் பாதிப்படைந்த நிலையில் அவர்கள் சிகிச்சை பெறச் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இன்றைய தினம் மாலை 03 மணியளவில் வடமாகாண ஆளுநர் உண்ணாவிரதம் இருந்தவர்களின் நிலைமையை நேரில் வந்து பார்வையிட்டு எங்களுடைய எல்லாக் கோரிக்கைகளையும் ஏற்பதாகத் தெளிவானதொரு உறுதி மொழியைத் தந்ததன் பின்னர் நிபந்தனையின் அடிப்படையில் தான் நாங்கள் இந்த உண்ணாவிரதத்தை நிறுத்தி ஒரு வார கால அவகாசத்தை வழங்கினோம். எங்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளைச் சரியான வகையில் செயற்படுத்தாதவிடத்து மீண்டும் இதே இடத்தில் எங்களுடைய உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.நகர் நிருபர்-