செய்திகள்

ஆஸி. தூதுவர் – யாழ்.ஆயர் சந்திப்பு

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் ரொபின் மூடி இன்று காலை யாழ்.ஆயர் இல்லத்தில் யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்தை சந்தித்தார்.

இந்தச்சந்திப்பின்போது, ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கில் ஏற்பட்டுள்ள நிலைமைகள், மக்களுக்குத் தேவைப்படும் உதவிகள் குறித்து விரிவாக்க கலந்துரையாடப்பட்டது என்று ஆயர் தெரிவித்தார். ஆட்சிமாற்றத்தின் பின் வடக்கில் பெரியளவு மாற்றம் ஏற்படாவிட்டாலும், சிறு சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆளுநர் மாற்றம், காணிகள் கையளிப்புக் குறித்த வாக்குறுதிகள் போன்றன மக்கள் மத்தியில் சில நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ளன.

வடக்குக்கு வந்த பிரதமர் இங்குள்ள நிலைமைகளை விரிவாக ஆராய்ந்து சென்றுள்ளார். குறிப்பாக இராணுவப் பிரசன்னம், பொது வேலைகளில் இராணுவத்தினர் ஈடுபடுவது போன்ற விடயங்களை அவர் நேரில் அவதானித்துச் சென்றுள்ளார். இதுபோன்ற விடயங்கள் நிறுத்தப்படவேண்டும் என்பது குறித்து அவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதைவிட மீனவர்களின் பிரச்சினைகள் குறித்தும் அவர் கருத்திலெடுத்துள்ளார்.

எனவே பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் வடக்கு விஜயமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது என்று நான் விளக்கினேன். இதற்கு பதிலளித்த ஆஸி. தூதுவர், வடக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை தாம் முன்னெடுத்துள்ளனர் என்றும், அந்த திட்டங்களை தாம் தொடர்ந்தும் முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம் என்றும் என்னிடம் உறுதியளித்தார் என்றும் ஆயர் தெரிவித்தார்.