செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் படுதோல்வி

ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 399 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 220 ரன்களும் எடுத்தன. 179 ரன்கள் முன்னிலையுடன் 3-வது நாளில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 65 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. ஷான் மார்ஷ் (69 ரன்), டேவிட் வார்னர் (62 ரன்), ஸ்டீவன் சுமித் (54 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 392 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 16 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 114 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது.
பேட்ஸ்மென்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் தான் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியாவின் சிறப்பான பந்துவீச்சால், ஒருவர் கூட நிலைத்து ஆட முடியாமல் திணறினர். அணியில் அதிகப்பட்சமாக ராம்டின் மட்டும் 29 ரன்கள் எடுத்தார்.

அபாரமாக பந்து வீசிய ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஹாசல்வுட், லியான், ஜான்சன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.ஏற்கனவே முதல் டெஸ்ட்டில் வென்ற ஆஸ்திரேலியா, இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-0 என்று தட்டிச்சென்றது.
ஆட்ட நாயகனாக ஸ்டீவன் ஸ்மித்தும், தொடர் நாயகனாக ஹாசல்வுட்டும் தேர்வு செய்யப்பட்டனர்.