செய்திகள்

ஆஸ்திரேலியா–நியூசிலாந்து மோதல்: பகல்–இரவு டெஸ்டுக்கு இளஞ்சிவப்பு பந்து தயார்

20 ஓவர் ஆட்டத்தின் தாக்கத்தால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் (5 நாள் ஆட்டம்) மவுசு குறைந்து வருகிறது. குறைவான ரசிகர்களே இந்தப்போட்டியில் நேரில் ரசிக்கிறார்கள்.ரசிகர்களை ஈர்ப்பதற்காக டெஸ்ட் போட்டிகளை பகல்–இரவாக நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) திட்டமிட்டது.

இதன்படி ஆஸ்திரேலியாவில் பகல்–இரவாக டெஸ்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா பகல்– இரவாக டெஸ்டில் மோதுகிறது. நவம்பர் மாதம் இந்த தொடர் நடக்கிறது. அடிலெய்ட், பிரிஸ்பேன், ஹோபர்ட் ஆகிய இடங்களில் போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளது.

பகல்–இரவு டெஸ்ட் போட்டிக்காக இளம் சிவப்பு பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இளம் சிவப்பு பந்துகள் தற்போது தயார் நிலையில் இருப்பதாக இதை தயாரித்துள்ள சோக்கபுரா நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரெட் எல்லியாட் கூறியதாவது:–

பகல்–இரவு டெஸ்ட் போட்டிக்காக புதிதாக இளஞ்சிவப்பு பந்துகளை தயார் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) ஆகியவற்றில் இந்த புதிய பந்து 5 ஆண்டுகளாக பரிசோதிக்கப்பட்டது. தற்போது இந்த இளஞ்சிவப்பு பந்து முற்றிலும் சர்வதேச போட்டிக்கு தயார் நிலையில் உள்ளது.

மங்கிய வெளிச்சத்தில் கூட பந்தை காணும் வகையில் கூடுதலாக மிளிரும் வண்ணங்களை பூசி இருக்கிறோம். பந்து மிளிர்வதால் பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள், பீல்டர்கள் என அனைவரும் இதை எளிதில் காண இயலும்.இந்த பந்துகளை ஐ.சி.சி.யின் மற்ற உறுப்பு நாடுகளான தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.