செய்திகள்

இங்கிலாந்தில் ஒழுக்கம் மீறி வீதிகளில் சுற்றிய இலங்கை அணி வீரர்களுக்கு சிக்கல்!

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் ஒழுக்கம் மீறி இரவில் வீதிகளில் சுற்றித் திரிந்தமை தொடர்பான வீடியோவொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

கொவிட் தொற்றுப் பாதுகாப்பு முறைகளையும் மீறி அவர்கள் ஹோட்டலில் இருந்து வெளியே வந்து இரவில் வீதியொன்றில் சிகரெட்டுடன் சுற்றும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், அவர்கள் இருவரையும் இலங்கை கிரிக்கெட் சபை உடனடியாக நாட்டுக்கு திருப்பி அழைக்க நடவடிக்கையெடுத்துள்ளதுடன், இருவர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு 3 ரி-20 போட்டிகளில் விளையாடிய நிலையில் மூன்றிலும் படுதோல்வியடைந்துள்ளது.

இந்த நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இவர்கள் இருவரும் வீதியில் சுற்றித் திரிந்தமை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-(3)