செய்திகள்

இணுவிலில்” கலை நிலம்” பிரதேச மலர் வெளியீடும் கலைஞர் கௌரவிப்பும்

வலி.தெற்குப் பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய ‘கலைநிலம்’ பிரதேச மலர் வெளியீட்டு விழாவும்,கலைஞர் கௌரவிப்பும் வடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதியுதவியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இணுவில் சிவகாமியம்மன் கோவில் மண்டபத்தில் இடம்பெற்றது.

வலி.தெற்குப் பிரதேச செயலர் முத்துலிங்கம் நந்தகோபாலன் தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம் . ஏ சுமந்திரன் பிரதம விருந்தினராகவும்,வடமாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன்,பாலச்சந்திரன் கஜதீபன்,யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

விழாவில் புகழ்பூத்த தவில் நாதஸ்வர வித்துவான்களின் மங்கள வாத்திய இசை நிகழ்வு இடம்பெற்றதைத் தொடர்ந்து ஏழாலை மகாவித்தியாலய மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து தலைமையுரை,விருந்தினர்கள் உரை என்பன நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து பிரதேசத்தின் கல்வி,கலை,கலாசாரம்,பொருளாதாரம்,மருத்துவம்,பண்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய ‘கலைநிலம்’ நூலினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளிpயிட்டு வைக்க முதற்பிரதியை யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன் பெற்று கொண்டார்.அதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இவ்விழாவில் குப்பிளானைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் சிவமகாலிங்கம் (சமயச் சொற்பொழிவு,இலக்கியம்),இணுவிலூர் தர்மசாஸ்தா குருகுல முதல்வர் பிரம்மஸ்ரீ தாணு நாத மகாதேவக் குருக்கள்(ஆன்மீகப் பணி),சங்குவேலியூர் பொன்னையா திருபாலசிங்கம்(மூத்த சவாரிக்கலை விற்பன்னர்),தாவடியூர் கே.எஸ்.ஆர்.திருஞானசம்பந்தன்,இணுவிலூர் செல்லையா இலகுநாதன்(கூட்டுறவுத்துறை நீண்ட கால உறுப்பினர்),ஏழாலையூர் குணரத்தினம் விக்கினேஸ்வரன்(சித்த வைத்தியர்) ஆகிய கலைஞர்கள் ‘ஞானஏந்தல்’ சிறப்பு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இவ் விழாவிலே யாழ்.பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் சி.சத்தியலிங்கம் நூலின் வெளியீட்டுரை ஆற்றியதோடு வலி.வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன்,நல்லூர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் எஸ்.கனகசபாபதி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,கலாசாரப் பேரவையின் அங்கத்தவர்கள்,கலைஞர்கள்,நலன் விரும்பிகள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
யாழ்.நகர் நிருபர்-

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA