செய்திகள்

இணுவிலில் மின் தாக்கியதில் அச்சக உரிமையாளர் பலி

இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மையிலுள்ள தனது அச்சகத்தில் பணி புரிந்து கொண்டிருந்த போது மின்கடத்தியில் ஏற்பட்ட மின் தடங்கலைச் சரி செய்யும் போது ஏற்பட்;ட மின் ஒழுக்குக் காரணமாக மின்சாரம் தாக்கி நேற்றுச் சனிக்கிழமை(05.04.2015) பிற்பகல் அச்சக உரிமையாளர் உயிரிழந்தார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,குறித்த நபர் இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மையிலுள்ள அச்சகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது மின்விசிறியை இயங்க வைப்பதற்காக ஏற்கனவே பிளக்கில் போடப்பட்டிருந்த மின்விசிறியின் இணைப்பை மற்றொரு பிளக்கில் மாட்டுவதற்காகக் கழற்றிய போது அதன் மேல் மூடி கழன்று விரல் மின்வயரில் பட்டது.இதன் காரணமாக அவர் தரை மீது தூக்கி வீசப்பட்டார்.

பாரிய சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த பக்கத்துக்குக் கடைக்காரர் நிலைமையை உணர்ந்து அங்குள்ள பிரதான ஆளியை நிறுத்தி விட்டு ஆட்டோவில் மின்சாரம் தாக்கப்பட்டவரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இவரது மரணம் தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி,பொலிஸ் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

உடுவில் கற்பகப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த இராசேந்திரம் செல்வானந்தன்(வயது-36) என்பவரே குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்தவராவர்.