செய்திகள்

இணைந்த வடக்கு – கிழக்கில் சுயாட்சி அடிப்படையில் தீர்வை கெரியிடம் வலியுறுத்தியதாக சொல்கிறார் சம்பந்தன்

பகிரப்படும் இறைமை அடிப்படையில் தமிழ் மக்கள் தாம் சரித்திர ரீதியாக வாழ்ந்துவந்த பகுதிகளில் தமது சமூக, பொருளாதார , கலாசார மற்றும் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் இணைந்த வடக்கு கிழக்கில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்ட சுயாட்சி அடிப்படையிலான தீர்வு வழங்கப்படவேண்டும் என்று இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜோன் கெரியிடம் வலியுறுத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

கெரியுடனான இன்றைய சந்திப்பில் தன்னுடன் வட மாகாண முதலமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரமேச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராஜா மற்றும் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இராணுவத்தின் வசம் இருக்கும் தமிழ் மக்களின் காணிகள் மீளவும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் அங்கு தொழில் செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் அதனை கேரி ஏற்றுக்கொண்டதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

யுத்தத்தில் காணாமல் போனவர்கள் குறித்து விரைவில் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றும் சிறைகளில் இருக்கும் தமிழ் இளைஞர் யுவதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் மேலும் தெரிவித்த சம்பந்தன் , இவை குறித்து ஏற்கனவே அரசாங்கத்துடன் பேசியிருப்பதாக கெரி குறிப்பிட்டதாக கூறினார்.