செய்திகள்

இணையத்தில் கசிந்த புலி விஜய் புகைப்படம்: படக்குழுவினர் அதிர்ச்சி

விஜய் நடிப்பில் சிம்பு தேவன் இயக்கி வரும் படம் ’புலி’.

இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், சுதீப், ஸ்ரீதேவி, நந்திதா, பிரபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், வித்யூலேகா ராமன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க படத்திற்கான ஒளிப்பதிவை நட்ராஜ் கவனிக்கிறார. பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒருசில தினங்களுடன் மொத்த படப்பிடிப்பும் முடிவடைய இருக்கிறது. இதனிடையே சமீபத்தில் ‘புலி’ படத்திற்கான கெட்டப்புடன் விஜய் நடந்து வருவது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இது படக்குழுவினரை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

இதுகுறித்து படத்தில் நடித்து வரும் வித்யூலேகா ராமன் தனது டுவிட்டர் பக்கத்தில், “‘புலி படத்தின் புகைப்படங்கள் கள்ளத்தனமாக வெளியானது எரிச்சலாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது. படக்குழு அனைவரும் மனவருத்தத்தில் உள்ளனர். யார் இதைச் செய்தது என விசாரித்து வருகின்றனர். அனைவருக்காகவும் ‘புலி’ முதல் பார்வை தயாராகி வருகிறது. ஆனால் 6 மாதங்கள் பாதுகாத்த பின் கடைசி நிமிடத்தில் இப்படி நடப்பது சங்கடமாக இருக்கிறது.” என்று தெரிவித்திருக்கிறார்.