செய்திகள்

இதயத்துடிப்புக்களை அறிந்து 4 பேரின் உயிர்களை நேபாள பூகம்ப இடிபாடுகளுக்குள் இருந்து காப்பாற்றிய ராடர்

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட ராடார் கருவி ஒன்று நேபாளத்தில் பூகம்ப இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருந்த 4 பேரின் இதய துடிப்புக்களை கண்டுபிடித்ததன் மூலம் அவர்களின் உயிர்களை காப்பற்றுவதற்கு உதவியிருக்கிறது.

இரு வேறு இடங்களில் சுமார் 10 அடி ஆழ கட்டட இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருந்த 4 பேரின் இதய துடிப்புக்களை Finder என்ற இந்த கருவி நுண் கதிர்களின் உதவியுடன் கண்டுபிடித்த பின்னர், மீட்பு பணியாளர்கள் அவர்களை உயிருடன் மீட்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நேபாளத்தில் 25 ஆம் திகதி பூகம்பம் இடம்பெற்ற பின்னர், 29 ஆம் திகதி இரண்டு சூட்கேஸ்கள் அளவுடைய இந்த கருவி நேபாளத்துக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தது.

நாசா தகவல்களின் படி, 30 அடி இடிபாடுகளுக்குள்ளும், 20 அடி திண்ம கொங்கிரீட்டுக்கு பின்னாலும் , 100 அடி திறந்த வெளியிலும் மனிதர்களின் இதய துடிப்புக்களை கண்டுபிடிக்கும் சக்தி இந்த கருவிக்கு இருக்கிறது.