செய்திகள்

இதுவரை வெளிவராத கே.பி பற்றிய இரகசியங்கள்: சிங்களப் பத்திரிகை தகவல்

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து அவருக்கு அடுத்து அமைப்பின் தலைவராகக் கருதப்பட்டவரும், பின்னர் இலங்கை புலனாய்வு அதிகாரிகளால் மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு தற்போது இராணுவத்தின் கண்காணிப்பில் வன்னியில் போரினால் அநாதைகளாகிவிட்ட சிறுவர்களின் பராமரிப்பு நிலையத்தை நிர்வகித்து வருபவருமான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனைப் பற்றிய விசாரணைகளை புலனாய்வுத்துறை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக திவயின சிங்களப் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும், இதற்கேற்ப கே.பி பற்றி இதுவரை வெளிவராத பல இரகசியத் தகவல்களை புலனாய்வு அதிகாரிகள் அண்மையில் தெரிவித்துள்ளதாகவும் இவற்றை உள்ளடக்கிய புதிய இரகசிய அறிக்கையொன்றை அரச பாதுகாப்பு அமைச்சுக்கு பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவு விரைவில் சமர்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கே.பிக்கு எதிராகப் பல்வேறு பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய முறைப்பாடு ஒன்று ஜே.வி.பி கட்சியின் சார்பிலும் அண்மையில் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

கே.பி. பற்றி, இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து புலனாய்வுத்துறை தரப்பில் வெளியிடப்பட்டிருந்த தகவல்களில் கே.பி புலிகள் இயக்கத்துக்காக வெளிநாடுகளில் நவீன ஆயுதங்களை மட்டுமன்றி சிலின் எனப்படும் சிறியரக விமானங்களையும் கொள்வனவு செய்ததாகவும் இவ்வாறு பங்களாதேஷ் நாட்டிலுள்ள ஒரு விவசாய இரசாயன உற்பத்தி நிறுவனம் மூலமாக கே.பி குறித்த சிலின் விமானங்களை கொள்வனவு செய்ததகாவும் அவற்றை இந்தோனேஷியாவிலிருந்து கடல் மார்க்கமாக முல்லைத்தீவுக்கு கடத்தி வந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது புதிய ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட பல்வேறு ஊழல்கள், மோசடிகள் பற்றிய புலனாய்வு விசாரணைகள் பரவலாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கே.பி பற்றிய புலனாய்வு விசாரணைகளையும் புலனாய்வுத்துறை மீண்டும் ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது.