செய்திகள்

இது ஆபத்தான காலம்- ரணிலும் ஆபத்தானவர்- அவதானமாக செயற்படுவோம்: வவுனியாவில் சிறிதரன்

யுத்தம் நடந்த காலத்தில் இறுக்கமாக இருந்த தமிழ் மக்கள் சமாதானம் பேச எப்போது முனைந்த போதே சிதறடிக்கப்பட்டதாக தெரிவித்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், தற்போதைய காலம் ஆபத்தான காலம் என்றும் ரணில் விக்கிரம சிங்கவும் ஆபத்தானவர் எனவும் ஆகவே தமிழ் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் தாயகம் அலுவலகம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

ஒரு விடுதலையை நோக்கி பயணிக்கின்ற தேசிய இனம் தனது அடையாளங்களை நிலை நிறுத்துவதற்கும் தமது மக்களையும் போராளிகளையும் சந்தித்து அவர்களினுடைய பிரச்சனைகளை ஆராய்வதற்கும் அலுவலகங்கள் முக்கியமானவை. அவ் அலுவலகங்கள் உயிரோட்டமானவையாக இருக்கவேண்டும். மா ஓ சேதுங் அவ்வாறே கிராமங்களாக பின்னர் கிராமங்களில் இருந்து வீடுகளுக்கு சென்று தனது சீன புரட்சிக்கான அத்திபாரத்தை இட்டிருந்தார்.

தமிழர்கள் தேசிய இனம். நாங்கள் ஒரு சிறுபான்மை இனம் அல்ல. எங்களில் பலருக்கு இது தொடர்பில் மயக்கங்கள் உள்ளது. ஆகவே மயக்கத்தில் இருந்து தெளிய வேண்டும். சுயநிர்ணய உரிமைக்காக இன்று நேற்று அல்ல 70, 80 ஆண்டுகளுக்கு மேலாக போராடுகின்ற ஒரு இனமாகும். சுயநிர்ணய உரிமையை கேட்பதற்கு நாங்கள் வரலாற்று ரீதியான ஒரு நிலப்பரப்பை கொண்டிருக்க வேண்டும். அவ் நிலப்பரப்பை நாங்கள் கொண்டிருக்கின்றோம். அத்துடன் மொழி, கலாசாரம் என்பவற்றையும் இந்த பூமி பந்தில் வைத்துள்ள ஒரு இனம். நாங்கள் வந்தேறு குடிகளல்ல.

நாங்கள் தேசிய இனம் என்ற ரீதியில் தான் எங்கள் உரித்தை நாங்கள் கேட்கின்றோம். அந்த உரித்து என்பது நாடு பிரித்தில் அல்ல. அண்மையில் பொஸ்னியாவில் வழங்கப்பட்ட சமஸ்டி அடிப்படையிலான தீர்வு, ஏற்கனவே சுவிஸ் நாட்டில் உள்ள சமஸ்டி அடிப்படையிலான தீர்வு, அமெரிக்காவில் உள்ள சமஸ்டி கூட வித்தியாசமான சமஸ்டி, இந்தியவில் உள்ள மொழி வாரியான சமஸ்டியும் இருக்கின்றது. ஆகவே அந்த அடிப்படையில் எங்களது சுயத்தை இழக்காமல் எங்களை நாங்களே ஆளுகின்ற சுயநிர்ணய தத்துவத்தின் பிரகாரம் நாங்கள் எங்களுக்கான ஆட்சி உரிமையை கேட்பது எங்களது முக்கியமான கடமையாகும்.

அதற்காகத்தான் நாங்கள் இந்த மண்ணிலே நாற்பதாயிரத்திற்கும் அதிகமான போராளிகளை புதைத்துள்ளோம். அவர்களது கல்லறைகளுக்கு கண்ணீரை சிந்த முடியாதவர்களாக இருக்கின்றோம். ஒருபெரும் போர் நடத்தி முடிந்து அதில் நாம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இருந்த ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதில் தமிழர்கள் தங்களுடைய முனைப்பை காட்டுகின்றார்கள். அதற்காகத்தான் நாங்கள் கடந்த 8 ஆம் திகதி தமிழ் மக்களிடம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒரு ஆட்சி மாற்றத்தை காண விருப்புகின்றோம் என்ற கோரிக்கையை விடுத்திருந்தது.

மகிந்த சிந்தனையை தோற்கடித்து மைத்திரி யுகத்தை உண்டாக்குவதல்ல எங்கள் நோக்கம். மாற்றம் என்ற ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படுகின்றது. மூச்சு வீடுவதற்கான காலம் வேண்டும், பேச்சு சுதந்திரம் வேண்டும் என்பதற்காக அந்த காலத்திற்காக வாக்களியுங்கள் என கேட்டிருந்தோம். அதனூடாக ஜனவரி 9 ஆம் திகதி இந்த நாட்டில் மாற்றம் ஏற்பட்டது.

இதன் காரணமாக தமிழர்களுடைய பல பிரதேசங்களில் வெடி கொளுத்தி ஆரவாரம் செய்தார்கள். இது மைத்திரியின் வெற்றிக்காக கொளுத்திய வெடி அல்ல. ஒரு கொடுங்கோலன், பல இசைப்பிரியாக்களையும் பாலச்சந்திரன்களையும் உடன் பிறந்த சகோதரர்களையும் சகோதரிக்களையும் நிர்வாணமாக்கி கொன்றவனை, கெரகொரவென இழுத்து சென்று நாங்கள் வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றோம் என்ற பழிவாங்கும் உணர்ச்சியோடு அவர்கள் அதனை செய்திருக்கின்றார்கள்.

இந் நிலையில் 100 நாட்களுக்குள் எல்லாம் நடந்து விடும் என்று எங்கள் மக்களிடம் நாங்கள் பொய்களை சொல்ல முடியாது. அதற்கு கால இடைவெளி இருக்கின்றது. அந்த கால இடைவெளியில் நாங்கள் அதனை செய்து கொண்டுதான் செல்ல வேண்டும். வட மாகாணசபைக்கான பிரதம செயலாளர் ஏற்கனவே இருந்தவர் இடமாற்றம் செய்யப்பட்டு புதியவர் நியமிக்கப்பட்டார். ஆனால் புதியவர் பதவியேற்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை. அவரை புலி என்கின்றார்கள், தமிழ் தேசியக்கூட்டமைப்புக்காரர் என்கின்றார்கள்.அதனால் மொனராகலையில் இருந்து இடமாற்றம் பெற்று செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

ஆகவே ரணில் நல்லது செய்வார் அல்லது மைத்திரி நல்லது செய்வார் என்று பார்க்காது இவர்கள் எவ்வளவு தூரம் எமது பிரச்சனையில் கவனம் செலுத்துவார்கள் என்பதே பிரச்சனை. சந்திரிக்கா காலத்தில் ரத்வத்தை வவுனியாவிற்கு வந்து இரண்டு பற்றரிகள் கொடுத்து அனுப்பியிருந்தார். அவருடைய சமாதானம் பற்றரியில்தான் தொடங்கியது. பின்னர் அவர் பற்றரியும் இல்லாமல் போய் விட்டார்.

இவ்வாறு சமாதான காலத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய சமாதான புறாக்களை பறக்கவிட்டு வருவார்கள். அதனால்தான் நாம் தற்போதுள்ள காலத்தை மிக துள்ளியமாக ராஜதந்திரமாக நகர்த்தவேண்டிய தேவையுள்ளது.

இதில் இருந்து நாம் தவறுவோம் ஆனால் எங்களுடைய இனப்பிரச்சனை கூட வேறு திசைகளுக்கு செல்லக்கூடிய சூழல் தோன்றி விடும். ஆகவே இதில் கவனமாக இருக்கவேண்டியது ஒவ்வொருவரது கடமையாகும். நாங்கள் வாக்குப்பலத்தின் ஊடாக பூமி பந்தில் ஒரு இனமாக செய்தியை சொல்லியிருக்கின்றோம். அதை இன்னும் இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டிய தேவை எங்களிடம் இருக்கின்றது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருக்கின்ற பல பாராளுமன்ற உறுப்பினர்களையே ரணில் விக்கிரமசிங்க சில வேளைகளில் தனித்தனியே சந்திப்பார். அவர் மிக மிக முக்கிய ஆபத்திற்கு உரிய நபர். சமாதானம் பேசும் காலங்களிலேயே நாம் அழிக்கப்பட்டோம். யுத்தம் நடந்த காலத்தில் நாம் இறுக்கமாக இருந்தவர்கள். சமாதானம் பேச எப்போது முனைந்தோமோ அப்போது எல்லாம் நாம் சிதறடிக்கப்பட்டிருக்கின்றோம்.

ஆகவே தான் இக் காலத்தில் நான் பயப்படுவதும் அவதானமாகவும் இருக்க நினைப்பது என்வென்றால் இந்தக்காலம் எங்களுக்கு ஆபத்தான காலம். அவர்கள் ஒவ்வொருவராக இனம் கண்டு உடைப்பார்கள். இதே ரணில் விக்கிரமசிங்க எங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே சாவகச்சேரிக்கு வந்து எங்களுடைய பிரதேசசபை உறுப்பினர் ஒருவரை தன்னுடைய கட்சியில் சேர்த்துவிட்டுப்போனார். அதுவும் தான் எதிர்க்கட்சியாக இருக்கும் போதே அவ்வாறு செய்தார். ஆகவே நாம் அவர்களுடன் சமாதானம் பேசும் போது மிக அவதானமாகவும் நிதானமாகவும் எங்களுடைய கொள்கையோடும் எங்களுடைய இலட்சியத்தோடும் எங்களுடைய மக்களை அணைத்து செல்லும் வகையில் எங்கள் பயணங்களை நாங்கள் மேற்கொள்ளவெண்டும்.

இதில் நாம் தவறினால் எங்கள் இனம் அடியோடு அழிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களே ஏராளம்.