செய்திகள்

இது தமிழர்களுக்கு ஆபத்தான காலமா?

லோ. விஜயநாதன்

மைத்திரி அரசாங்கம் பதவியேற்று இன்றுடன் 21 நாட்கள் கழிந்த நிலையில் அதன் மாற்றத்தை நோக்கிய 100 நாட்கள் திட்டத்தில் மீதமாக 79 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால், உறுதியளித்தபடி இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் மேலும் கால அவகாசத்தை வேண்டி நிற்கின்ற நிலைக்குச் செல்ல வேண்டிய தேவையை அரசியல் களநிலவரங்களை ஆராயும்போது தெளிவாகத் தென்படுகின்றது.Champika-Chandrika-Ranil-Mahinda

ராஜபக்ஸக்களின் 10 வருட கால ஆட்சியின் விளைவாக அரச நிர்வாகத்துறைகளில் விளைச்சல் பெற்றுள்ள களைகளை அகற்றி சீர்செய்வதற்கே இந்த அரசுக்கு பல வருடங்கள் தேவைப்படும்போல் உள்ளது. இதற்கிடையில் ராஜபக்சக்கள் மீண்டும் எழுச்சியுற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முனையலாம் என்ற பயத்தல் அவர்களுக்கெதிரான பிரச்சாரங்களையும் ஏனைய சட்ட நடவடிக்கைகளையும் மைத்திரி அரசாங்கம் முடுக்கி விட்டுள்ளது. அமைச்சர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் வீக்கம் காணத் தொடங்கியுள்ளது. அதேநேரம் மைத்திரி அரசாங்கத்தின் உட்கட்சி முரண்பாடுகள் மெதுவாக வெளிக்கிளம்பத் தொடங்கிவிட்டன. இது அண்மையில் ஊவாமாகாண முதலமைச்சராக பதவியேற்ற ஹரின்பெர்ணான்டோ தெரிவித்த கருத்தில் இருந்து தெரிகிறது. அதாவது அரசு மாற்றம் ஒன்று உண்மையில் ஏற்படவில்லையென்றும் வெற்றிலையே பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் பெரும்பான்மையுடன் உள்ளது என்று மனம் குமுறி இருந்தார்.

இவற்றுக்கிடையே எப்படியாவது 19வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து அடுத்த பொதுத் தேர்தலில் எப்படி கூட்டணி ஆட்சியை கொண்டு செல்வது என்று சிங்களதேசம் தனது உள்ளக அரசியல் குழப்பநிலைக்குள் சிக்கித் திணறுகின்றது. இது ஒரு வகையில் அதன் வெளியக அரசியல் குறுங்கால காய் நகர்த்தல்களுக்கு சாதகமாகவும் உள்ளது. சிங்கள தேசத்தின் ஆட்சி மாற்றம் ஸ்திரமான நிலையில் இருப்பதையே மேற்குலகும் இந்தியாவும் விரும்புகின்றன. இதற்கான கால அவகாசத்தையம் பொருளாதார அனுகூலங்களையும் பெற்றுக் கொடுக்கக் கூடிய வகையிலேயே எதிர்வரும் ஜெனிவா மனித உரிமை கூட்டத் தொடரை மையப்படுத்திய நகர்வுகள் அரங்கேரத் தொடங்கியுள்ளன. இதன் ஓர் அங்கமாகவே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அண்மைய இந்தியாவுக்கான விஜயமும் சந்திப்புக்களும் அமைந்துள்ளன. இந்திய அமைதிப்படையின் தளபதிகளில் ஒருவரான அசோக் மேத்தா இந்து நாளிதழுக்கு எழுதியுளுள்ள கட்டுரை முதல் ஜெனிவா தீர்மானத்தை பற்றிய முன்னாள் அமெரிக்க தூதுவர் டெரிஸ்டாஸ்காவார் எழுதியுள்ள கட்டுரைவரை எல்லாமே புதிய அரசாங்கத்துக்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதில் இருந்து சர்வதேசத்தின் போக்கை நன்கு அறிந்து கொள்ள முடியும்.

முஸ்லிம் காங்கிரஸின் சுயலாப அரசியல்

மறுபுறத்தில் முஸ்லிம் காங்கிரஸோ எரிகின்ற வீட்டில் பிடுங்குவது இலாபம் என்ற தனது மூல அரசியல் தத்துவார்த்தத்தின் அடிப்படையில் அமைச்சுக்கள், ராஜாங்க அமைச்சுக்கள், நிர்வாகத்துறையில் தலைமைப் பதவிகள் என்பவற்றுடன் கிழக்கு மாகாணத்தின் ஆட்சி மற்றும் அமைச்சுப் பதவிகள் என்று தனது ஆசைகளை பெருக்கி வைத்திருக்கிறது.slmc_leaves_government_rauf_hakkeem_sri_lanka_muslim_512x288_bbc_nocredit

மக்கள் நலம், உரிமை என்பவற்றை ஒட்டு மொத்தமாக குழிதோண்டி புதைத்து விட்டு யார்யாருக்கு என்ன என்ன பதவிகள் பெற்றுக் கொடுத்தோம் என்ற ஆபத்தான விஷ அரசியல் கலாச்சாரத்தை அப்பாவி முஸ்லிம் மக்களின் வாக்குகளினூடாக வளர்த்துவிட முனைகின்றார்கள். இது முஸ்லிம் சமூகத்துக்கு ஆரோக்கியமான அரசியலாக அமையாது. வடகிழக்கைப் பொறுத்தவரையில் தமிழ்பேசும் மக்கள் என்றும் ஒன்றிணைந்து செயற்படுவதே ஒரு முழுமையான அரசியல் விடுதலை பெறுவதற்கு உதவியாக இருக்கும். கடந்த ஜனாதிபதித் தேர்தல் இதற்கு ஒரு முன்னுதாரனமாகும்.

தமிழ் தலைமைகளோ தமக்கிடையே ஒருவரை ஒருவர் திறக்கப்பட்ட களமுனையை எவ்வாறு நகர்த்தி தமக்கு சாதகமாக்கிக் கொள்வது என்று சிந்திக்காது தமது தனிப்பட்ட பகையுணர்ச்சி காரணமாக ஒருவரை ஒருவர் தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். இங்கு தமிழ் மக்களின் மிகவும் நேசத்துக்குரிய சில அப்பாவிகள் தமது அறியாமையின் காரணமாக, தம்மை மற்றவர்கள் எப்படி தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை அறியாது தம்மையும் தாம் சார்ந்தவர்களையும் அதிருப்திக்கு உட்படுத்தி தம்மை தெரிவு செய்த மக்களையும் குழப்பத்திற்குள்ளாக்கி கடைசியில் அரசியல் அநாதைகள் ஆகும் நிலையில் இருக்கின்றனர்.

ஒருங்கிணைந்த செயற்பாட்டின் அவசியம்

கடந்த வருடம் மார்ச் மாதம் ஜெனிவா மனிதவுரிமை கூட்டத்தொடரின் போது புலம் பெயர்தேசத்தில் ஓர் ஆரோக்கியமான அரசியல் கலாச்சாரம் ஒன்று உருவாகியது. அதாவது, புலம்பெயர் தமிழர் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், நிறுவனங்கள் தமக்கிடையேயான வேற்றுமைகளை புறம்தள்ளி ஜெனிவா மனிதவுரிமை சபைக் கூட்டத் தொடரை மையப்படுத்தி தமிழ் மக்களின் செயற்பாட்டை வலுவூட்டும் வகையில் ஒன்றிணைந்த, பரஸ்பர நம்பிக்கையுடன் கூடிய ஒரு அணுகுமுறையை மேற்கொண்டிருந்தார்கள். தனியே ஜெனிவாவை மையப்படுத்தி மட்டும் அன்றி, எல்லா சந்தர்ப்பங்களிலும் இதுபோன்ற ஒரு ஒருங்கிணைந்த அரசியல் செயற்திட்டங்களை தமிழ் தேசத்து, புலம்பெயர்தேசத்து மற்றும் தமிழ்நாட்டு செயற்பாட்டாளர்கள் முன்னெடுப்பதே முன்னெப்போதையும் விட பூகோள அரசியலின் ஆதிகத்துக்குட்பட்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் வெற்றிபெறுவதற்கு இட்டுச்செல்லும்.

எதிரி எப்படி வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டை அடியொற்றி எமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கினான் என்பதை இத்தருணத்தில் மீட்டுப்பார்ப்பது நாமே எம்மை புடம்போட்டுப் பார்க்க உதவியாக இருக்கும். ஏனெனில், அதே எதிரியே தற்போது அரியணையில் உள்ளான் என்ற விழிப்பூட்டலை எம்மத்தியில் ஏற்படுத்திக்கொள்ள முடியும். 2001 இல் அப்போதைய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தென்னிலங்கை மக்கள் ஒரு மாற்றம் வேண்டி நின்றபோது, இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அன்றைய பிரதமராக ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார். அப்போது ஏற்பட்ட அரசியல் மாற்றமே இலங்கை வரலாற்றில் ஏற்பட்ட முதலாவதும் கடைசியுமான நிறைவேற்று அதிகாரத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையேயான அதிகாரப் போட்டியாக அமைந்தது. அந்த காலகட்டத்தில், ஏறக்குறைய 350 வருடங்களுக்குப் பின்னர் தமிழனுக்கென்றொரு ஆட்சி இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் 30 வருடகால படிநிலை வளர்ச்சியினூடாக முப்படைகளுடனும் உலகும் வியக்கும் வண்ணம் பலமாக இருந்தது. அப்போது, உலகையே உலுக்கும் வகையில் ஆழிப்பேரலையின் தாக்கம் பாரிய அழிவை தமிழ் தேசத்துக்கு ஏற்படுத்தியிருந்தபோதிலும், மிகக் குறுகிய காலத்திலேயே மிகவும் வினைத்திறனுடன் முழு உலகும் வியக்கும் வண்ணம் அத் தேசம் மீள் எழுச்சி பெற்று நின்றது.

சமாதானப் பொறியும் பாதுகாப்பு வலைப்பின்னலும்

bala-ranil

ஆனால் அந்த வலுவான தேசத்தை, தனது குள்ளநரித்தனத்தினூடாக அன்றைய பிரதமரும் இன்றைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சமாதானப்பேச்சு என்ற போர்வையில் சர்வதேச சூழ்ச்சிக்குள் சிக்கவைத்தார். மறுபுறத்தில் தனது நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரத்தை பயன்படுத்தி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, இறைமை எனும் பெயரில் யுத்தநிறுத்த உடன்படிக்கை காரணமாக தமிழ் தேசத்துக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு சில வாய்ப்புக்களையும் கத்தரித்து விடுகிறார். பேச்சுவார்த்தை நீண்டு சென்றது. ஆனால், உயர்பாதுகாப்பு வலயம் அப்படியே இருந்தது. கடலில் புலிகளுக்கு இருந்த அதிகாரம் இல்லாமல் செய்யப்பட்டது. புலிகளின் பல ஆயுதக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. ஒரு பெரும் பொறிக்குள் சிக்குப்பட்டிருப்பதை அபோது தான் தமிழ்தேசம் உணர்ந்து கொண்டது. இதிலிருந்து விடுபடும் ஒரு முயற்சியாக ஒன்றும் இல்லாத சுனாமி கட்டமைப்பை (PTOMS) ஏற்றுக்கொள்வதற்கு புலிகள் முயன்றவேளை ஜே.வி. பி அதனை இனவாதமயப்படுத்தப்பட்டிருந்த ஸ்ரீ லங்கா நீதிமன்றத்தினூடாக அதனை செயலற்றுப்போகச் செய்கிறது. ராஜபக்ஸவை குறைத்து எடைபோட்டு அல்ல, மாறாக ரணில் தலைமையிலான சர்வதேச சூழ்ச்சிப் பொறிமுறைக்குள் இருந்து விடுபடும் ஒரு தந்திரமாகவே ராஜபக்ஸவை அன்றைய ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற செய்யும் காய் நகர்த்தலை புலிகள் மேற்கொண்டனர். ஆனாலும், ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்திய சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னலின் பிடியிலிருந்து புலிகளால் வெளியே வர முடியவில்லை.

இந்த பின்னணியில் தான், காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாக ராஜபக்ச வந்து தமிழ் இனப்படுகொலையை 24 அரசுகளுடன் இணைந்து நடத்தி முடிக்கிறார். கடைசியில் இந்த ராஜபக்சக்களே சிங்கள தேசத்தின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான கொழும்புப் பல்கலைக்கழகத்தினால் டாக்டர் பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டு சிங்களத்தின் கதாநாயகர்களாகப்படுகிறார்கள். இறுதியில் சிங்களத்திற்கே அவர்கள் சர்வாதிகாரிகளாகி மாற்றம் வேண்டிய மக்களினால் விரட்டியடிக்கப்படுகிறார்கள்.KC_20140518_sri_lanka_Mahinda_Rajapakse_840_578_100

எப்படி சுத்திரக்கட்சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே.வி. பி ஆகிய சிங்கள கட்சிகள் வேற்றுமைகளில் தமிழ்போராட்டத்தை அழிப்பதற்காக ஒற்றுமைகண்டு அதனூடாக வெற்றிபெற்றார்கள் என்ற படிப்பினையூடாக தெளிவு பெற்று அதே கட்சிகளும் அவர்களின் தலைவர்களும் தான் தற்போது சிங்களதேசத்தின் ஆட்சியில் உள்ளார்கள் என்பதை நினைவிலிருத்தி தமிழ் தலைவர்கள் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

இராஜதந்திரப் போர்க்களம் திறக்கப்பட்டுள்ளது

இன்றுவரை தமிழ் மக்கள் முடக்கப்பட்டு, தினந்தோறும் துன்புறுத்தல்களுக்கும், பாலியல் வன்கொடுமைகளுக்கும், காணாமல்போதல்களுக்கும் உள்ளாக்கப்பட்டு கட்டமைப்புசார் இன அழிப்பை எதிர்கொண்டு வருகின்றார்கள். தற்போது சிறிது மூச்சு விடுவதற்கான ஓரு சந்தர்ப்பமும், மிகப் பெரிய ஆபத்தான இராஜதந்திரப் போருக்கான களமுனை ஒன்றும் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்திற்கூடாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மிக அண்மையில் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்னுடைய பாராளுமன்ற உரையிலும் டைம்ஸ் ஒப் இந்தியாவுக்கு வழங்கிய பேட்டியிலும் ஒற்றை ஆட்சிக்குள் தான் தமிழ் மக்களுக்கான தீர்வு அமைந்திருக்கும் என்றும் பொலிஸ் அதிகாரம் இல்லாத 13 ஆவது சட்ட திருத்தமே இனப்பிரச்சினைக்கான தீர்வு என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு எந்தவொறு தமிழ் தலைவர்களும் கண்டிக்கத்தவறியமையானது வருத்தமளிப்பதாக இருப்பதுடன் அவர்களின் அரசியல் செயற்பாடுகளை கேள்விக்குறிக்கும் உள்ளாக்குகிறது. எதிரி வெளிப்படையாக சில கருத்துக்களை முக்கியமான இடங்களில் முக்கியமான தருணங்களில் தெரிவிக்கும் போது அதை உடனடியாக நிராகரித்து தமிழ்மக்களின் அபிலாசைகள் ஒருபோதும் ஒற்றை ஆட்சிமுறைக்குள் நிறைவேறாது என்றும் அதிகாரப் பகிர்வு என்பது வடகிழக்கு மக்களுக்கேயன்றி இலங்கையின் மாகாணங்களுக்கல்ல என்பதையும் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்.

Tamil actovistsஎதிர்தரப்பு இனப்பிரச்சினை பற்றி பேசாதவரை ஆபத்தில்லை. ஆனால் அதுபற்றி பேசத் தொடங்கும் போது தமிழ்தரப்பு விழிப்பாக இருத்தல் வேண்டும். மத்தியில் அமைச்சுக்களை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தும் இதே அரசே கிழக்கில் மாகாண ஆட்சியை ஏற்கமுயலும் தமிழ் தரப்பின் முயற்சிக்கு தாம் எந்தவித ஆதரவையும் வழங்கத் தயாரில்லை என்றும் நடுநிலைப் போக்கை கடைப்பிடிக்க போவதாகக் கூறி, ஆனால் பின்னர் முஸ்லிம் காங்கிரஸு க்கு ஆதரவளிப்பதற்கு முன்வந்திருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். தனது 100 நாள் திட்டத்தில் உடனடியாகவும் முழுமையாக நிறைவேற்றப்பட்ட ஒரே ஒரு திட்டமாக தமிழ் இன அழித்தொழிப்பின் தளபதியான சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பினூடாக மீண்டும் சகல பதக்கங்களும் நட்சத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளமையானது இந்த அரசாங்கம் எவ்வளவுக்கெவ்வளவு சிங்கள தேசத்தின் நலன்களுக்கே முன்னுரிமை வழங்குவதை அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.

மே 2009 இல் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், ராஜபக்ஸவின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் தமிழ் தேசத்திலே உரிமைக்கான தமிழ் மக்களின் போராட்டம் தேக்கநிலையில் இருந்து வந்த நிலையில், தற்போது களம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு, போராடுவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்ற அதே அளவுக்கு ஆபத்துக்களும் இருக்கின்றன. இங்கு அறிவு தான் ஆயுதம். துப்பாக்கிகள் அல்ல. ஆதலால், போரிடுவதற்கு (அறிவு ரீதியாக) மக்களை சகல மட்டங்களிலும் வலுவூட்டவேண்டும். வாய்ப்புக்கள் கிடைக்கும்போது குறுகிய கால இலக்குகளான கைதிகள் விடுதலை, பிரிந்த உறவுகளை ஒன்றிணைத்தல், மீள்குடியேற்றம், இராணுவத்தை அப்புறப்படுத்தல், பொருளாதார கட்டமைப்புக்களை ஏற்படுத்தி மக்களை வலுப்படுத்தல் போன்ற செயற்பாடுகளை திறமைசார் நிபுணத்துவக் குழுக்களை ஏற்படுத்தி செயற்படுத்த வேண்டும். குறிப்பாக, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஈழ அகதிகளை சகல வீட்டு வசதிகளுடனும் மீள்குடியேற்றும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் இழந்து போன பலத்தை தமிழ் மக்கள் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும். அதேவேளை, ஏற்படுத்தப்படவுள்ள அரசியல் மறுசீரமைப்பு மூலம் கொண்டு வரப்படவுள்ள உத்தேச தொகுதிவாரி தேர்தல் முறைமையானது இலங்கைத் தீவில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவங்களை பாதிக்காத வகையில் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதேவேளை, இந்தியா வகுக்கும் 13வது திருத்தச் சட்டம் என்ற படுகுழிக்குள் வீழ்ந்து விடாது, அவதானமாக சர்வதேச அரங்கிலும் இலங்கைத் தீவிலும் விரைவாகவும் விழிப்புணர்வுடனும் தமிழ் மக்கள் தமது இலக்கை நோக்கிய ராஜதந்திர காய்நகர்த்தல்களை தொடங்கவேண்டிய உடனடித் தேவையுள்ளது. இதற்கு தமிழ் மக்கள் z_fea800மத்தியில் மிகச் சிறந்த கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும். தமிழ்தேசத்தின் அபிலாஷைகளை அடைவதற்கு சலுகை அரசியல் நடத்தும் முஸ்லிம் கட்சிகளை நம்பியிருக்காது உரிமைக்காக குரல் கொடுக்கும் முஸ்லிம் மக்களை ஒன்றிணைத்து செயற்படுவதே இக்காலத்துக்குறிய தேவையான அரசியல் அணுகுமுறையாகும். அதேவேளை, தற்போது கனிந்துவரும் ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தி தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள போர்வெற்றி என்ற மாயையை இல்லாமல் செய்வதற்கு இந்தப் போர் எப்படி நடத்தப்பட்டது என்பது பற்றிய உண்மையையும் இது உண்மையில் போர் வெற்றியல்ல ஒரு இனஅழிப்பு என்பதையும் தெளிவுபடுத்துவதற்கான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவே மாறிவரும் நாடுகளுக்கிடையிலான சர்வதேச நலன்களுக்கிடையே தமிழ் மக்களின் நலன்களை உட்புகுத்தி எமது அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் இறுதித் தீர்வை பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பைப் பெற்றுத்தரும்.