செய்திகள்

இத்தாலி அருகே படகு கவிழ்ந்தது: 400 பேர் உயிரிழந்திருக்கலாம்

இத்தாலி அருகே படகு கவிழ்ந்ததில் 400 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சட்டவிரோதமாக இத்தாலியில் குடியேற முயன்ற 550 பேருடன் லிபியாவில் இருந்து பயணத்தை ஆரம்பித்த படகு மத்திய தரைக்கடலில் பயணித்த போது, திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.தகவல் அறிந்த இத்தாலியின் கடலோர காவல் பாதுகாப்புப் படையினர் 150 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.

எஞ்சியவர்கள் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என மீட்புக் குழுவினர் கூறியிருப்பதால், அவர்கள் அனைவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.மூழ்கியவர்களில் பெரும்பாலோனோர் சிறுவர்கள் என உயிருடன் மீட்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.இதையடுத்து, அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா கோரியுள்ளது.