செய்திகள்

இந்தியன் முஜாகிதீனுடன் இணைந்து அல்காய்தா தாக்குதல் திட்டம்: இந்திய உளவுத்துறை

அல் காய்தாவும், இந்தியன் முஜாகிதீனும் இணைந்து இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தெற்கு ஆசியாவில் தங்களின் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல புதிய கிளை தொடங்கப்போவதாக அல் காய்தா அறிவித்திருந்தது. இந்நிலையில், அல் காய்தாவுடன் இணைந்து இந்தியன் முஜாகிதீன் மற்றும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் உள்ள குழுக்கள் பயிற்சி பெற்று வருகின்றன. இது தொடர்பாக தங்களின் விசாரணையில் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன என்று இந்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஏற்கெனவே, இந்தியன் முஜாகிதீன் அமைப்பு இந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி யிருக்கிறது. இந்நிலையில், அல் காய்தாவுடன் அந்த அமைப்பு சேர்ந்தி ருப்பது மிகவும் கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அல் காய்தாவும், அதனை சார்ந்த அமைப்புகளும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன. அதே போன்ற தாக்குதலை இந்தியாவிலும் நடத்த இந்த அமைப்புகள் திட்டமிட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.

இந்தியா மீது தாக்குதல்

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் இந்திய எல்லையான வாகாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கொல்கத்தா துறைமுகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த போர்க் கப்பல்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன. இந்த சம்பவங்கள் அனைத்தும், அல் காய்தாவின் செயல்பாடுகள் இந்தியாவின் எல்லையை எட்டிவிட்டதையே உணர்த்துகின்றன.

தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ.) தலைவர் சரத் குமார் கூறும்போது, “ஆப்கானிஸ்தானில் அல் காய்தா அமைப்பு செல்வாக்கை இழந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், அல் காய்தாவும், இராக் மற்றும் சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். அமைப்பும், இந்தியாவில் உள்ள குழுக்களுடன் இணைந்து செயல்படுகின்றனவா என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்றார்.

இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த சிலர், ஏற்கெனவே ஆப்கானிஸ்தானில் அல் காய்தாவுடன் இணைந்து தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த குழுவைச் சேர்ந்த 11 பேர் இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி செய்ததாக, ஏற்கெனவே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல் பரிமாற்றம்

இணையம் வழியாக பரிமாறிக் கொள்ளப்படும் ரகசிய தகவல்களை அமெரிக்கா உதவியுடன் இந்திய உளவுத் துறை ஆராய்ந்ததில், இந்தியன் முஜாகிதீனுக்கும், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் பதுங்கியுள்ள இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ரியாஸ் பத்கல், அல்காய்தாவுடன் நேரடியாக தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுடன் இணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்து தனது ஆதரவாளர்களிடம் பேசி யுள்ளார். அதோடு, பாகிஸ் தானின் ஐ.எஸ்.ஐ.யை கடுமையாக விமர்சித்தும் பேசியுள்ளார்.