செய்திகள்

இந்தியாவின் தலையீடு இல்லாமல் இலங்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது: சென்னையில் மாவை

இந்தியாவின் தலையீடு இல்லாமல் இலங்கையில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், மற்றும் வடக்குமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இதன்போது, கருத்து வெளியிட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் சந்தித்த போது, எங்களுடன் தாம் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். எனவே, இந்திய அரசாங்கம் மீது நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

இந்தியாவின் தலையீடு இல்லாமல் இலங்கையில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. வடக்கு மாகாணசபைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது அதற்குத் தெளிவான சான்றாகும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், எமது செல்வாக்கை குறைப்பதற்காக, இலங்கை அரசாங்கம், தமிழ்மக்களைத் திட்டமிட்ட அடிப்படையில், தமது பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து இடம்பெயர வைக்கிறது.

தமிழர் பகுதிகளில் அதிகளவில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள கணவனை இழந்த இளம் தமிழ்ப் பெண்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.