செய்திகள்

இந்தியாவுடனான அரையிறுதிப்போட்டியில் கடுமையான வார்த்தை பிரயோகங்கள் தவிர்க்க முடியாதது

இந்தியாவுடனான அரையிறுதிப்போட்டியில் வார்த்தை போர் என்பது தவிர்க்க முடியாத விடயமாக காணப்படும் என அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் போக்னர் தெரிவித்துள்ளார்.

காலிறுதியில் பாக்கிஸ்தானின் வஹாப் ரியாசிற்கும், ஆஸியின் சேன் வட்சனிற்கும் இடையிலான மோதல் போட்டிக்கு புதிய சுவாரஸ்யத்தை அளித்தது. எனினும் இரு வீரர்களும் அதற்கான விலையை செலுத்தவேண்டியிருந்தது.சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அவர்களை அதற்காக தண்டித்தது. இந்திய அணியிடம் வஹாப் போன்ற வேகத்தில் வீசக்கூடிய வீரர் எவரும் இல்லாதபோதிலும், வஹாப்பின் அணுகுமுறையை இரு அணியின் வீரர்களும் பின்பற்ற முனைவார்கள் என்கிறார் போக்னர்.

Umesh Yadav

கிரிக்கெட்டில் இது தவிர்க்க முடியாத விடயம்,அது இல்லாவிட்டால் தான் பிரச்சினை,மேலும் போட்டியின் தன்மையையும் கருத்திலெடுக்கவேண்டும். இது அரையிறுதி, வாழ்வா சாவா என்ற நிலை,நிச்சயமாக கடினமான வார்த்தை பிரயோகங்கள் காணப்படும்,மிக கடினமான போட்டியாக இது அமையப்போகின்றது, இரு அணிகளும் பின்வாங்கப்போவதில்லை.என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி உலககிண்ணப்போட்டியில் புதிய உத்வேகத்தையும், தன்னம்பிக்கையும் பெற்றுள்ளது.ஏழு போட்டிகளில் இதுவரை தோற்காமலுள்ளது.  ஓரு மாத காலத்திற்கு முன்னர் காணப்பட்ட நிலைக்கு எதிர்மாறானது இது. இதனால் இந்திய அணியும் சொற்பேரில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

கடந்த 18 மாதங்களில் நாங்கள் அவர்களுடன் பல போட்டிகளில் விளையாடியுள்ளோம்மேலும் கடந்த சில மாதங்களாக அவர்கள் இங்கேயேயுள்ளனர், என போக்னர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை வியாழக்கிழமை சிட்னி ஆடுகளத்தின் தன்மை எவ்வாறானதாக காணப்படும்,சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான நிலை காணப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆடுகளத்தை தான் இன்னமும் பார்வையிடவில்லை என தெரிவித்துள்ள போக்னர்ஆடுகளத்தை பொறுத்தே பல விடயங்கள் அமையும்,இலங்கைக்கு எதிராக நாங்கள் விளையாடியவேளை அது துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமானதா காணப்பட்டது, நாங்கள் 360 ற்கு மேல் பெற்றோம், அவர்களும் 300 ஓட்டங்களுக்கு மேல் பெற்றார்கள். அன்று அது சிறந்த ஆடுகளமாக காணப்பட்டது. ஆடுகளம் அவ்வாறானதாக காணப்பட்டால் இரு அணிகளும் அதிக ஓட்டங்களை பெறலாம், என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையவில்லை,அவர்கள் எவ்வாறான அணியுடன் களமிறங்குவார்கள், எங்களில் யார் விளையாடுவார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆடுகளமே அனைத்தையும் தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.