செய்திகள்

இந்தியாவையும் ஐ.நா.வையும் சமாளிக்கும் தந்திரோபாயமே 1000 ஏக்கர் காணி விடுவிப்பு: சஜீவன்

இலங்கை  ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது இந்தியாவை சமாளிக்கும் முகமாகவும், வரவுள்ள  ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரினை சமாளிக்கும் திட்டமுமே, கடந்த அரசினால் கொண்டு வரப்பட்டு மக்களால்  நிராகரிக்கப்பட்டிருந்த வலி.கிழக்கு காணி விடுவிப்பு என்ற பேச்சு எனத் தெரிவித்த வலி.வடக்கு பிரதேச சபையின்  துணைத் தவிசாளர் ச.சஜீவன், இந்நிலம் மக்கள் குடியேற்றத்துக்கு உகந்த நிலம் அல்ல எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

புதிய அரசு விடுவிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கும் 1000 ஏக்கர் நிலம் வலி.வடக்கிற்கு சொந்தமானது அல்ல. அது வலி. கிழக்கிற்கு சொந்தமான நிலம். இவ்விடம் ஏற்கனவே இருந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்த்தினால் விடுவித்து அதில் மாதிரிக்கிராமங்களை உருவாக்கி நான்காயிரம் குடும்பங்களை குடியமர்த்துவதற்கான பேச்சுகள் எழுந்தபோது மக்கள் தாம் தங்களுடைய சொந்த நிலத்திற்குத்தான் செல்வோம். வேறு நிலங்களுக்குச் செல்ல தயாரில்லை எனத் தெரிவித்து  கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் இந்த வளலாய் பிரதேசம் தொண்டமானாறு பகுதியை அண்டி காணப்படுவதால் மழைகாலங்களில் உவர்நீர் உறைந்து  காணப்படும் பிரதேசமாக இருக்கிறது. அதேவேளை இங்கு மக்கள் வாழ்வதற்கான சூழல் பெருமளவில் இல்லை. முன்னைய அரசு கொண்டுவந்து மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்த விடயத்தினைத்தான் புதிய அரசும் தற்போது கையில் எடுத்திருக்கிறது.

வலி, வடக்கு மக்கள் தங்களுடைய சொந்த நிலத்தினைத் தவிர வேறு எந்த இடத்திற்கும் செல்லத் தயாரில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். எனவே, இக்காணி விடுவிப்பு என்பது  இந்தியாவுக்கு நாளை செல்லிவிருக்கும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுடைய காணிகளை விடுவித்திருக்கிறோம் என்று கூறி இந்தியாவை சமாளிப்பதற்கும், தொடங்கவுள்ள  ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போது அதனை தங்களுக்கு சாதகமாக்கும் புதிய அரசின் தந்திரோபாயமே தவிர, இதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை.