செய்திகள்

இந்தியா – அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்துக்கு தடை விலகியது

இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் கடந்த 7 ஆண்டுகளாக நீடித்து வந்த தடை நீங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்புக்குப் பின், இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தனர்.

அப்போது மோடி கூறும்போது, “கடந்த சில மாதங்களாக இந்திய – அமெரிக்க உறவில் புதிய எழுச்சியும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. இருதரப்பு உறவில் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளதாக உணர்கிறேன்.002

குறிப்பாக, இருதரப்பு உறவில் அணுசக்தி ஒப்பந்தம் மையப்புள்ளியாக விளங்குகிறது. இது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த ஒப்பந்தம் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி உள்ளதுடன், சுத்தமான எரிசக்தியை உருவாக்க வேண்டும் என்ற எங்களது நோக்கத்தை விரிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் நீடித்து வரும் தடையை நீக்க கடந்த 4 மாதங்களாக இரு நாடுகளும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. இது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பிறகு, வர்த்தக ரீதியாக ஒத்துழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான சட்டத்துக்கு உட்பட்டு தொழில்நுட்ப மற்றும் வர்த்தக ரீதியாக ஒருங்கிணைந்து செயல்படுவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.