செய்திகள்

இந்திய அமைதிப்படை செயலாளராக பணிபுரிந்த ஜெய்சங்கர் வெளியறுவு செயலாளராக நியமனம்

இந்தியாவின் மத்திய வெளியுறவுத் துறையின் புதிய செயலாளராக, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் எஸ்.ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டார். இது தொடர்பான விஷேட அறிவித்தல் இந்தியப் பிரதமரின் அலுவலகத்தினால் நேற்றிரவு வெளியிடப்பட்டது. இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படையின் செயலாளராக செய்சங்கர் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நியமனங்களுக்கான குழுவின் கூட்டம் புதுடில்லியில் நேற்றிரவு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, புதிய வெளியுறவுச் செயலர் நியமனம் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

சுஜாதா சிங்

சுஜாதா சிங்

வெளியுறவுச் செயலராகப் பணியாற்றி வந்த சுஜாதா சிங்கின் இரண்டு ஆண்டு பதவிக்காலம்,வருகிற ஆகஸ்டில்தான் நிறைவடையும். இந்த நிலையில், அவர் அதிரடியாக நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய வெளியுறவுத் துறை செயலராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

“1976 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த சுஜாதா சிங்கின் பதவிக்காலம் உடனடியாக முடித்துக் கொள்ளப்படுகிறது. அவரது பொறுப்புக்கு நியமிக்கப்படும் 1977ஆம் ஆண்டு ஐஎஃப்எஸ் அதிகாரியான எஸ்.ஜெய்சங்கர் இப்பதவியில் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்பாக, சீனாவுக்கான இந்தியத் தூதராகவும், சிங்கப்பூருக்கான துணைத் தூதராகவும் ஜெய்சங்கர் பணியாற்றினார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான குழுவில் முக்கிய பொறுப்பையும் ஜெய்சங்கர் வகித்துள்ளார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிகாப்புப் படையின் செயலராகவும், அரசியல் ஆலோசகராகவும் ஜெய்சங்கர் பணியாற்றினார்.

அரசியல் அறிவியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்ற இவர், சர்வதேச உறவுகள் குறித்து ஆய்வு செய்து, டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.