செய்திகள்

இந்திய உதவி இல்லாமல் மகிந்தவால் புலிகளை அழித்திருக்க முடியாது: இந்திய தொலைக்காட்சி பேட்டியில் ரணில்

“இந்திய உதவி இல்லாமல், மகிந்த ராஜபக்ஷவால் விடுதலைப் புலிகளை அழித்திருக்க முடியாது. இந்திய உதவிகளை பெற்றுக் கொண்டவர், 13-வது சட்ட திருத்ததை அமல்படுத்தி, பின் அதற்கும் மேலே சலுகைகளை அளிப்பதாக வாக்களித்தார். ஆனால் அதை நிறைவேற்றவில்லை” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார்.

பிரதமர் ரனில் விக்ரமசிங்க இந்தியாவின் ‘தந்தி’ தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி அளித்தார். இதன்போதே இது தொடர்பில் அவர் விரவாகக் கூறியுள்ளார். பேட்டியின் முழு விபரம் வருமாறு:

கேள்வி:- இலங்கை இந்திய உறவில், இன்று சீனா பற்றிய நிலைப்பாடு என்னவாக உள்ளது?. மகிந்த ராஜபக்ஷ அரசு சீன சார்புடையது என்று கருதபட்டது…

பதில்:- இந்திய-இலங்கை உறவை, சீன-இலங்கை உறவில் இருந்து வேறுபடுத்தியே வைத்திருக்கிறோம். இரண்டும் எங்களுக்கு முக்கியமானவை. இந்தியாவுடன் எங்களுக்கு வரலாற்று உறவு உள்ளது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் வரும் எந்த ஒரு செயலையும், மற்ற நாடு செய்யாது என்று பரஸ்பரம் முடிவு செய்திருக்கிறோம். எனவே சீனாவுடனான உறவிலோ, இதர நாடுகளுடனான உறவிலோ இந்த ஒப்பந்தத்தை கருத்தில் கொண்டு தான் செயல்படுகிறோம்.

ஆனால் மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் என்ன நடந்தது என்றால் சீனாவை மிரட்ட இந்தியாவின் பெயரையும், இந்தியாவை மிரட்ட சீனாவின் பெயரையும் பயன்படுத்தினார். இது விவேகமற்ற கொள்கை. இந்தியா எங்களுக்கு உதவி செய்தது. இந்திய உதவி இல்லாமல், ராஜபக்சேவால் புலிகளை அழித்திருக்க முடியாது. இந்திய உதவிகளை பெற்றுக் கொண்டவர், 13-வது சட்ட திருத்ததை அமல்படுத்தி, பின் அதற்கும் மேலே சலுகைகளை அளிப்பதாக வாக்களித்தார். ஆனால் அதை நிறைவேற்றவில்லை.

கேள்வி:- போரில் வெல்ல இந்தியா உதவி செய்ததா?.

பதில்:- ஆம், நிச்சயமாக.

கேள்வி:- ஆனால் இந்தியா இதை தொடர்ந்து மறுத்து வருகிறதே?.

பதில்:- மறதி என்பது அரசியல்வாதிகளுக்கு மிக சாதாரணம்.

கேள்வி:- அகதிகள் நாடு திரும்ப இலங்கையில் சரியான சூழல் உள்ளது என்று கருதுகிறீர்களா?.

ranil-wickramasinghaபதில்:- அகதிகள் இலங்கைக்கு திரும்ப ஏற்ற சூழல் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு இன்னும் சந்தேகம் தீராமல், மேலும் கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், அவகாசம் அளிக்கலாம். சூழல் படிப்படியாக மேம்பட்டு, இயல்பு நிலை திரும்புகிறது என்று தெரிய வந்தால், இலங்கை அகதிகள் தாயகம் திரும்பலாமே என்று தமிழக மக்களே கருத தொடங்குவார்கள். ஆனால் யாரையும் நாங்கள் நிர்ப்பந்திக்க மாட்டோம். சூழல் கனியும் போது தானாகவே அகதிகள் திரும்புவார்கள்.

கேள்வி:- வட மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானம் பற்றி கேட்டே ஆக வேண்டும். தொடர்ச்சியாக இலங்கை அரசுகள் தமிழர்களுக்கு எதிராக இன அழிப்பு செய்தனர் என்ற தீர்மானம் பற்றி என்ன கருதுகிறீர்கள்?.

பதில்:- முதல்வரின் இந்த பேச்சு மிக மிக பொறுப்பற்றது. நான் இதை ஏற்கவில்லை. அவருடன் தொடர்பு கொள்வதில் சிக்கலை ஏற்படுத்தும் தீர்மானம் இது. இந்தியாவில் ஒரு மாநிலம், இந்திய அரசு இன அழிப்பு நடத்துகிறது என்று தீர்மானம் நிறைவேற்றினால் இதே போன்ற சிக்கல் தான் அங்கும் உருவாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சம்பந்தன் போன்றவர்களுடன் இதுபற்றி பேசி வருகிறேன். போர் நடந்த போது அனைத்து தரப்பிலும் மக்கள் கொல்லப்பட்டது உண்மை. தமிழர்கள் மட்டுமல்ல, முஸ்லிம்களும், சிங்கள மக்களும் கூட கொல்லப்பட்டனர்

கொல்லப்பட்ட தமிழர்களில் ஒரு பகுதியினர் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டனர் என்பதை மறக்க கூடாது. யாழ்ப்பாணத்தின் அரசியல் தலைமை முழுவதையும் புலிகள் கொன்றழித்தனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உறுப்பினர்கள் மற்றும் இதர குழுவினர் அனைவரும் புலிகளால் கொல்லப்பட்டனர். தமிழ் அரசியல்வாதிகள் யாரும் இலங்கை படையினரால் கொல்லப்படவில்லை. யாழ்ப்பாண தலைவர்கள் பலரும் புலிகளால் கொல்லப்பட்டனர். மக்களிடம் கேட்டு பாருங்கள்.

கேள்வி:- போரின் கடைசி கட்டம் பற்றிய ஐ.நா. அறிக்கைப்படி, ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 40 ஆயிரம் என்று ஐ.நா. சொல்கிறது…

பதில்:- ஐ.நா. அறிக்கை போரின் கடைசி கட்டத்தை பற்றி பேசுகிறது. அந்த கட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்டனர். எண்ணிக்கையை பற்றி சர்ச்சை உள்ளது. 40 ஆயிரம் மக்கள் கொல்லபட்டதாக ஐ.நா. அறிக்கை சொல்கிறது. சில அதிகாரபூர்வ அறிக்கைகள் 5 ஆயிரம் என்று சொல்கின்றன.

கேள்வி:- ஒரு லட்சம் இருக்கும் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் சொல்கின்றனர்…

பதில்:- இல்லை. நான் அப்படி சொல்ல மாட்டேன். 40 ஆயிரம் அளவுக்கு கூட இருக்காது என்றே கருதுகிறேன். அதை உறுதிபடுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.

கேள்வி:- ராஜபக்சே விடுதலை புலிகளுக்கு பணம் கொடுத்தார் என்று குற்றம் சாட்டுகிறீர்களா?.

பதில்:- ஆம். இதை ராஜபக்சே கூட மறுத்ததில்லை. பிரபாகரன் பணத்தை பெற்று கொண்டார்.

கேள்வி:- 13-வது சட்டத்திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துவோம் என்கிறீர்கள்… ஆனால் மாகாண இணைப்பு இல்லை, காவல்துறை அதிகாரம் இல்லை….

பதில்:- இணைப்பு என்பது 13-வது சட்டத்திருத்தத்தின் அம்சம் அல்ல. வடக்கும், கிழக்கும் ஒன்றாகும் என்று யாரும் சொல்லவில்லை. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் 1 வருடத்திற்கான தற்காலிக இணைப்பு என்று தான் இருந்தது. அதற்கு பிறகு பொது வாக்கெடுப்பு தேவை. பொது வாக்கெடுப்பு நடத்துவேன், ஆனால் அதற்கு எதிராக பிரசாரம் செய்வேன் என்று அன்றே அதிபர் ஜெயவர்த்தனே பேசினார்.

கேள்வி:- இப்போது நீங்கள் பொது வாக்கெடுப்புக்கு தயாரா?.

பதில்:- இரண்டு மாகாண சபைகளும் விரும்பினால் நாங்கள் நடத்துவோம்.

கேள்வி:- இந்தியா இலங்கைக்கிடையேயான நீண்டகால பிரச்சினையாக மீனவர் பிரச்சினை உள்ளது. இது எப்படி தீர்க்கப்பட வேண்டுமென கருதுகிறீர்கள்?.

பதில்:- இது தமிழக-இலங்கை மீனவர்களிடையிலான பிரச்சினை. அவர்கள் இதை பேசித்தீர்க்க வேண்டும். இந்திய மீனவர்கள் இழுவை மடி வலைகள் கொண்டு மீன் பிடிப்பதை அனுமதிக்க முடியாது. இது இலங்கையின் கடல் பரப்பு. இலங்கை மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் இப்படி மீன்பிடித்தால் என்ன செய்திருப்பீர்கள்? நாங்கள் உங்கள் பரப்பில் மீன் பிடிக்க வேண்டும், அதுவும் இழுவை மடிகளை பயன்படுத்தி மீன் பிடிக்கவேண்டும் என்று கேட்கிறீர்கள்.

கேள்வி:- ஆனால் அது அவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பரப்பு என்கிறார்கள்…

பதில்:- கச்சத்தீவு உடன்படிக்கை ஏற்பட்ட காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட படகு வகைகளை நீங்கள் பயன்படுத்தினால்.. நாங்கள் பரிசீலிப்போம்..

கேள்வி:- எங்கள் மீனவர்கள், இழுவை முறையில் மீன் பிடிப்பதை கைவிட தயார் என்கிறார்கள்…

பதில்:- அவர்களை இழுவை மடிகளை கைவிடச்சொல்லுங்கள். இரு நாட்டு மீனவர்களுக்கிடையில் திருமண பந்தங்கள் உண்டு… அவர்கள் இந்த பிரச்சினையை பேசித்தான் தீர்க்க வேண்டும். இது எங்கள் வடக்கு மீனவர்களின் மீன்பிடி பகுதி..

கேள்வி:- அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை வழங்க நீங்கள் தயாரா?.

பதில்:- கச்சத்தீவு ஒப்பந்தம் ஏற்பட்டபோது பயன்படுத்தப்பட்ட படகு வகைகள், அதே எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்டால்… இதைப்பற்றி பேச நாங்கள் தயாராக உள்ளோம்.

கேள்வி:- நீங்கள் கச்சத்தீவு விவகாரத்தை குறிப்பிட்டீர்கள்… கச்சத்தீவு மீட்பே பிரச்சினைக்கு தீர்வு என தமிழகம் கருதுகிறது.. கச்சத்தீவை மீண்டும் ஒப்படைப்பது பற்றி பரிசீலிப்பீர்களா?.

பதில்:- கச்சத்தீவு இலங்கையின் பகுதி. இந்திய அரசும் அது இலங்கைக்கு சொந்தம் என்றே கருதுகிறது. இது தமிழக அரசியலில் ஒரு பகுதி என்பது எனக்கு நன்கு தெரியும். மீனவர் விவகாரத்தை பொறுத்தவரை, இது எங்கள் வடக்கு மீனவர்களின் பாரம்பரிய உரிமையை சார்ந்தது. எங்கள் தெற்கு பகுதி மீனவர்கள் கூட, புத்தலம் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய மீனவர்கள் வந்து இழுவை மூலம் மீன் பிடிப்பதாக கூறுகின்றனர். இது எங்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இது எங்கள் மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை.

கேள்வி:- கச்சத்தீவு விவகாரத்தை இந்தியா எழுப்பினால், கச்சத்தீவை திரும்ப ஒப்படைப்பது குறித்தோ, ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொடுப்பது குறித்தோ பரிசீலிப்பீர்களா?.

பதில்:- இதோ பாருங்கள். கச்சத்தீவை நாங்கள் விட்டுத்தரப்போவதுமில்லை, ஒப்பந்தத்தில் கொடுக்கப்போவதுமில்லை, இந்தியா இதை எழுப்பப்போவதுமில்லை. இந்தியா இதை எழுப்பாது.

கேள்வி:- பிரதமர் மோடியின் பயணத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?.

பதில்:- இது நல்லெண்ணத்தின் அடிப்படையிலான பயணம். இரு நாடுகளிக்கிடையிலான உறவுகளை மேம்படுத்தும்.