செய்திகள்

இந்திய பெண்கள் அணியின் 2-வது தோல்வி குறித்து மிதாலி ராஜின் கருத்து

பெண்களுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தர்மசாலாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் ( பி பிரிவு) மோதின. கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய வீராங்கனைகள், இங்கிலாந்தின் பந்து வீச்சில் அதிரடியாக ஆட முடியாமல் திணறினர். ஹர்மன்பிரீத் கவுர் (26 ரன்), கேப்டன் மிதாலி ராஜ் (20 ரன்) தவிர வேறு யாரும் 20 ரன்களை கூட தொடவில்லை. 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 90 ரன்களே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஹீதர் நைட் 15 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளும், வேகப்பந்து வீச்சாளர் அன்யா ஸ்ருப்சோல் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
தொடர்ந்து களம் புகுந்த இங்கிலாந்து வீராங்கனைகளுக்கு, இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் கடும் குடைச்சல் கொடுத்தனர். மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்த போதிலும் தட்டுத்தடுமாறி எப்படியோ இலக்கை கடந்து விட்டனர். இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. அந்த அணிக்கு இது 2-வது வெற்றியாகும். அதே சமயம் 3-வது ஆட்டத்தில் ஆடிய இந்தியாவுக்கு இது 2-வது அடியாகும். ஏற்கனவே பாகிஸ்தானிடமும் தோற்று இருந்தது. இந்த தோல்வியின் மூலம் பெண்கள் உலக கோப்பையில் இந்தியாவின் அரைஇறுதி வாய்ப்பு மங்கிய போய் விட்டது.
இந்திய கேப்டன் மிதாலி ராஜ் கூறுகையில், ‘நாங்கள் இன்னும் போட்டியில் நீடிக்கிறோம். கடைசி லீக் ஆட்டத்தில் நாங்கள் வெஸ்ட் இண்டீசை (மார்ச் 27-ந்தேதி) தோற்கடித்தால், அதன் பிறகு மற்ற அணிகளின் முடிவுகளின் பொறுத்து எங்களுக்குரிய வாய்ப்பு அமையும்’ என்றார்.