செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளியிட இரு நாடுகளும் சட்டம் கொண்டுவர வேண்டும்: விக்னேஸ்வரன் ஆலோசனை

இலங்கையின் வடக்கு கடற்பரப்பினுள் இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் அத்துமீறி நுழைந்து கடல் வளத்தையும் வடபகுதி மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களையும் நாசம் செய்வதனை நிறுத்தும் ஒரு யோசனையாக இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் வரையறுக்கப்பட்ட கடற்பரப்பினுள் இழுவைப்படகுகள் மூலம் மீன் பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை கொண்டுவரவேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் முன்மொழிந்துளார்.

நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த யோசனையை தெரிவித்த முதலமைச்சர் இந்த யோசனையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுளார்.

இந்த சந்திப்பில் அமைச்சர் ஜோசப் மைக்கேல் பெரேரா, பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜயவர்த்தன, வட மாகாண ஆளுநர் பள்ளிகக்கார , கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் ஜயந்த பெரேரா மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்திய மீனவர்களின் இந்த அத்துமீறல் பிரச்சனை 1974 ஆம் ஆண்டு இழுவைப்படகுகள் (ரோலர்) அறிமுகம் செய்யப்பட்ட பின்னரே ஏற்பட்டதாகவும், அதற்கு முன்னர் இரு நாட்டு மீனவர்களும் பல நூற்றாண்டுகளாக சுமுகமான முறையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்த முதலமைச்சர் அதனால் தான் வரையறுக்கப்பட்ட கடற்பரப்பில் இரு நாட்டு மீனவர்களும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கும் சட்டத்தை இரு நாட்டு அரசாங்கங்களும் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் கூறினார்.

அவ்வாறு சட்டத்தை கொண்டு வரும்போது, இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கும் மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடிக்கு மிகவும் வளம் உள்ள அராபிய மற்றும் வங்காள குடா கடற்பரப்பை நோக்கி மீனவர்களை நகர்த்த முடியும் என்றும் , இது பாரம்பரிய மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி முறைமைகளின் மூலம் வடக்கு கடற்பரப்பில்
மீன் பிடிப்பதற்கு உதவும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த சட்டத்தை கடுமையான முறையில் அமுல்படுத்த வேண்டும் என்றும் இதன்பொருட்டு இரு நாட்டு கடற்படையினரும் கூட்டாக கண்காணிப்பில் ஈடுபடலாம் என்றும் தெரிவித்த முதலமைச்சர் இதன்பொருட்டு தென் இந்தியாவின் கிழக்கு துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இழுவைப்படகுகளை அகற்றி அவற்றை திருவனந்தபுரம் மற்றும் விசாகப்பட்டினம் பகுதிகளுக்கு நகர்த்த வேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளார்.

முதலமைச்சரின் இந்த ஆலோசனையுடன் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜயவர்தன உடன்பட்டுளார். அதேவளை, முதலமைச்சரின் இந்த ஆலோசனையை சிறிது காலத்துக்கு பரீட்சார்த்தமாக அமுல்படுத்தி எந்தளவுக்கு பயனளிக்கிறது என்று பார்க்கலாம் என்று வட மாகாண ஆளுநர் பள்ளிகக்கார குறிப்பிட்டதாக அறியவருகிறது. இதேவேளை , முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநருமான ஒஸ்ரின் பெர்னாண்டோ , விடுதலைப்புலிகளின் காலகட்டத்தில் இந்த பிரச்சினையை கையாளுவதில் அவர்கள் கடைப்பிடித்த அணுகுமுறைகள் பற்றி விபரித்ததாகவும் அறியமுடிகிறது.

தென் இந்தியாவின் அரசியல் செல்வாக்கு மிக்க மிகப்பெரும் இழுவிசைப்படகு உரித்துனர்கள் எவ்வாறு வடக்கு கடலின் படுக்கைகளை துஸ்பிரயோகம் செய்கின்றனர் என்ற ஒரு காணொளி விளக்கத்தை கடற்படை தளபதி இந்த சந்திப்பின்போது அளித்ததாகவும் தெரியவருகிறது.