செய்திகள்

இந்திய மீனவர்கள் பற்றிய ரணிலின் சர்ச்சைக்குரிய கருத்து பற்றி சுஷ்மா பேசுவார்

எல்லை தாண்டும் மீனவர்களை சுடுவோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் இலங்கை பிரதமர் பேசியது குறித்து, தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கேள்வி எழுப்புவார் என தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் “இந்திய மீனவர்கள் அவர்கள் எல்லைக்குள் மீன்பிடிக்க வேண்டியது தானே? இங்கு எதற்காக வருகிறார்கள்? இது எங்கள் கடல் பகுதி. இதற்குள் எல்லை தாண்டி வந்தால் நாங்கள் சுடுவோம். எல்லை தாண்டி வரும் மீனவர்களை சுடுவதில் எந்த மனிதஉரிமை மீறலும் இல்லை. இதற்கு சட்டத்தில் முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியதாக, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இந்த நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கை பிரதமரை சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசுவார் என்று அந்த நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுதுறை செய்தி தொடர்பாளர் சையது அக்பரூதின் கூறுகையில், மீனவர்கள் பிரச்சினை மனிதாபிமானம் மற்றும் வாழ்வாதார பிரச்சினை. இந்த விவகாரத்தில் இலங்கையுடன் இணைந்தே தீர்வு காண விரும்புகிறோம்.

அமைதியாகவும் நட்பு ரீதியாகவும் இந்த விவகாரம் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கும் போது சுஷ்மா சுவராஜ் மீனவர்கள் விவகாரம் குறித்து பேசுவார்” என்று தெரிவித்தார்.