செய்திகள்

இந்திய மீனவர்கள் 54 பேரும் படகுகளும் விடுவிக்க இலங்கை அரசுக்கு பரிந்துரை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 54 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று விடுவிக்கப்படவுள்ளனர்
இந்தியாவின் ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 54 மீனவர்கள் கடந்த 22ஆம் திகதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சென்னையில் இன்று இருநாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் 54 மீனவர்களையும் விடுவிக்க இலங்கை அரசு அங்குள்ள நீதிமன்றங்களுக்குப் பரிந்துரை செய்தது.

இதன்படி விடுதலை செய்யப் பரிந்துரை செய்யப்பட்ட மீனவர்கள் இன்று ஊர்க்காவல்துறை மற்றும் மன்னார் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டும் எனத் தமிழக மீனவர் அமைப்புகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.