செய்திகள்

இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் இன விகிதாசாரத்துக்கேற்ப அரசியல் பிரதிநித்துவம் வேண்டும் : அமைச்சர் திகாம்பரம்

20 ஆவது அரசியல் சீர்த்திருத்தத்தின் போது மலையகத் தமிழ் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுமானால் தமிழ் முற்போக்கு முன்னணி வெறுமனே பார்த்துக்கொண்டிருக்காது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

மஸ்கெலியா , பொகவந்தலாவை , லிந்துலை ஆகிய பிரதேசங்ளைச் சேர்ந்த தோட்டங்களுக்கான நலன்புரி கூடாரங்கள் , கதிரைகள் மற்றும் தோட்டப்பகுதி விளையாட்டுக்கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் என்பனவற்றை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் , சிங்;.பொன்னையா , சரஸ்வதி சிவகுரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் வாழுகின்ற இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் இன விகிதாசாரத்துக்கு ஏற்ப அரசியல் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும் வகையிலேயே புதிய தேர்தல் சீர்த்திருத்தம் அமைய வேண்டும்.

இதனை நான் ஜனாதிபதியிடமும்  பிரதமரிடமும் அமைச்சரவையிலும் முன்வைத்துள்ளேன். எனினும் இதற்கு மாறாக எவராவது செயற்பட்டால் மக்களுக்காக எவ்வித தியாகமும் செய்ய காத்திருக்கின்றோம்.

இன்று மலையகத்தைச் சேர்ந்த சிலர் 20 ஆவது அரசியல் சீர்த்திருத்தம் குறித்து ஏதேதோ கதைக்கின்றார்கள் எனினும் மலையகத் தமிழ் மக்களின் மீது உண்மையாக அக்கறையுள்ள நாம். ஒரு போதும் மக்களுக்குத் துரோகம் செய்ய மாட்டோம்.

1000 ரூபா சம்பளத்தைப் பெற்றுத் தருகின்றோம் என்று கூறியவர்கள் இன்று சம்பள உயர்வுக் கோரிய மக்களின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்த தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

கடந்த பத்து வருட காலமாக இல்லாமல் இருந்த தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சை மீண்டும் பொறுப்பெடுத்துள்ள நான் இன்று தோட்டப்பகுதிகளில் பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளேன். கட்சி தொழிற்சங்க பேதமின்றிய எனது சேவைக்கு மக்கள் பூரண ஆதரவு தெரிவிப்பதானது எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மத்திய மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் அரசியல் தலையீடு அதிகரித்துள்ளதால் அதிபர் ஆசிரியர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். கழுகுப் படை , பறக்கும் படை என்ற பல படைகள் பாடசாலைகளுக்குச் சென்று ஆசிரியர்களின் குறைபாடுகளை தேடுகின்றதாம். இவ்வாறு படையாகச் செல்கின்றவர்கள் தம்மிடமுள்ள குறையை முதலில் இனங்கண்டு கொள்ள வேண்டும். என்று அமைச்சர் பழனி திகாம்பரம் மேலும் தெரிவித்தார்.

IMG_3706