செய்திகள்

இந்திய வம்சாவளியை மோடி மறந்தது ஏன்?

“நல்லெண்ணத்துடன் நல்லாட்சி உதயமாகியுள்ள இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாராதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் இரத்தத் தொடர்பு கொண்டுள்ள இலங்கையில் வாழும்  இந்திய வம்சாவழி மக்களை சந்திப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தாமல் ஒதுக்கி வைத்தமை இந்திய தமிழர் நெஞ்சங்களில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தில் பெருந்தோட்டப்பகுதி இருட்டடிப்பு செய்திருப்பது கண்டணத்திற்குரியது.

இதை அரசாங்கமும், அதில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்களும், புரிந்து கொள்ளாமல் பல தமிழ் புத்திஜீவிகளையும், அரசியல் பிரமுகர்களையும் குரோத ரீதியாக ஒதுக்கி வைத்துவிட்டு சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் அல்லாதவர்களை தலைவர்களாக கருதி கூட்டணி அமைத்துக்கொண்டு மோடியை சந்தித்து என்ன பேசப்போகிறார்கள் என்று தெரியவில்லை” இவ்வாறு ஐக்கிய தேசிய முற்போக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர். திவ்வியராஜன் தெரிவித்துள்ளார்.

இருநூறு வருடங்களாக அடிப்படை வாழ்வாதார தேவைகளை இழந்து வாழும் சமூகத்தின் அவசியங்களையும், அரசியல் உறவினையும் பாரத பிரதமருக்கு மறைத்துள்ள விடயத்தை தட்டிக்கேட்க முடியாத பெருந்தோட்டத்துறை அரசியல்வாதிகள். தங்களது இயலாமையையும் சுயநலத்தையும் வெளிப்படுத்தும் வகையிலேயே அவர்களது செயல்பாடுகள் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது கண்டண அறிக்கையில் ஆர். திவ்வியராஜன் மேலும் தெரிவித்துள்ளதாவது.

“இந்திய வம்சாவழி தமிழர் சமூகம் ஓரங்கட்டப்பட்டு, ஒதுக்கப்படுவதற்கு இதுவே சிறந்த உதாரணம். வடகிழக்கு தமிழர்கள் மீது கரிசனை காட்டும் அரசும். இந்திய அதிகாரிகளும் இந்தியாவுடன் இந்தியர்கள் என்றும், தமிழகத்துடன் தொப்புள் கொடி உறவும் கொண்டுள்ள மக்களை தீண்டத்தகாதவர்களாகவே கருதுவதாக எண்ணத் தோன்றுகிறது.

ஏற்கனவே  இலங்கைக்கு இளவரசர் சார்ல்ஸ் வருகை தந்த போது சித்து விளையாட்டு காட்டியவர்கள் இந்திய பிரதமருக்கும் அதே விளையாட்டை காட்டியுள்ளனர்.

தோட்டங்களில் அவலத்துடன் வாழும் மக்களின் வீட்டுப்பிரச்சனை முதல் சமூக சுகாதாரப்பிரச்சனைகள் வரை இழுபறிபடுகின்றது. ஆடிமைத்தனமான நிர்வாகத்துக்குள் தமிழ் தொழிலாளிகள் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் சுரண்டப்பட்டு வருகிறார்கள். டிக்கோயா கிளங்டன் வைத்தியசாலையை பாரதப்பிரதமர் மூலம் அங்குரார்ப்பணம் செய்யாமல் விட்டதேன்? 4000 இந்திய வீடமைப்புத்திட்டம் மௌனித்துப்போனதேன்? திட்டமிட்டு ஒதுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவழி தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் அரசினாலும், மலையக தமிழ் அமைச்சர்களாலும் சிதைக்கப்பட்டுவிட்டதாக எழுந்துள்ள மக்கள் குற்றச்சாட்டையும். கொந்தளிப்பையும் எவராலும் மறுக்க முடியாது.

இருநூறு வருடங்களாக உழைப்பாளிகளாக வாழும் இந்திய தமிழர் சமூகத்தின் தாயகத் தலைவர் மோடி 27 வருடங்களுக்கு பின்னர் பிரதம மந்திரியாக இலங்கைக்கு வருகை தருவது பெருமையையாகவும், அதே நேரம் நம்பிக்கையையும், சமூகநல செயல்பாடுகளையும் உருவாக்கும் என்று காத்திருந்த இந்திய வம்சாவழி தமிழர்களின் எதிர்பார்ப்பும், எண்ணமும் வெறும் கனவாகி இருப்பது வேதனையான விடயமாகும்.