செய்திகள்

இந்திய வீட்டுத் திட்டத்தால் ‘கடனாளியாவதாக’ சம்பூர் மக்கள் கவலை

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் அண்மையில் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்கள் இந்திய-உதவி திட்ட வீடுகளை பெறுவதற்கு தயக்கம் காட்டுவதாக கூறப்படுகின்றது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இந்திய-உதவி வீடொன்றை நிர்மாணிப்பதற்கு 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றது.

2009-ம் ஆண்டு செய்யப்பட்ட செலவின மதிப்பீட்டுத் தொகையில் 7 வருடங்கள் கழிந்த பின்னரும் வீடொன்றை அமைப்பது சாத்தியமற்றது என்று சம்பூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கத்தின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான குமாரசாமி நாகேஸ்வரன் கூறுகின்றார்.

இதன் காரணமாகவே வீடுகளை பெறுவதற்கு தகுதியுடைய பயனாளிகள் அவற்றை ஏற்பதற்கு தயக்கம் காட்டுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

போர் காரணமாக 10 வருடங்களுக்கு முன்னர் தமது பிரதேசத்திலிருந்து வெளியேறியிருந்த சம்பூர் மக்கள் அண்மையில் தான் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்காலிக கொட்டில்களிலும் கூடாரங்களிலும் வாழ்கின்றனர்.

அதிகாரபூர்வ தகவல்களின் படி, இதுவரையில் 350 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளன. இந்த குடும்பங்களில் 204 குடும்பங்கள் இந்திய-உதவி வீடுகளை பெறுவதற்கு தெரிவாகியுள்ளதாக அறியமுடிகின்றது.

ஏற்கனவே சம்பூர் பிரதேசத்தின் அண்மித்த கிராமங்களான கூனித்தீவு, நவரட்ணபுரம், கடற்கரைச்சேனை, கட்டைப்பறிச்சான் போன்ற கிராமங்களில் இந்த உதவி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

வீடுகளை அம்மக்கள் பெற்றிருந்தாலும் வழங்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லாத நிலையில் வீடு கிடைத்தும் கடனாளிகளாகவே அவர்கள் தங்களின் வீடுகளை முடித்துள்ளதாக குமாரசாமி நாகேஸ்வரன் கூறுகின்றார்.

தொழிலாளர்களின் கூலி அதிகரிப்பு , கட்டட பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவற்றை காரணம் காட்டி வீட்டுக்கான தொகையை 7 இலட்சம் ரூபா தொடக்கம் 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க வேண்டும் என சம்பூர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்திய வீடமைப்புக்கு பொறுப்பான நிறுவனம் மற்றும் சிவில் அதிகாரிகளின் கவனத்திற்கு இந்தப் பிரச்சனை மக்களால் கொண்டு வரப்பட்டிருந்த போதிலும் அவர்களால் அது நிராகரிக்கப்பட்டு விட்டதாக குமாரசாமி நாகேஸ்வரன் தெரிவிக்கின்றார்.

n10