இந்து சமுத்திர கடற்போக்குவரத்தை கண்காணிக்கும் இந்தியாவின் திட்டத்திற்கு பின்னடைவு
இந்து சமுத்திரத்தில் கடற்போக்குவரத்தை கண்காணிப்பதற்காக ராடர்தொகுதிகளை நிறுவும் இந்தியாவின் திட்டம் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக இந்தியாவின் எகனமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அதன் தமிழ் வடிவம் ( சமகளம் செய்தியாளர்).
மாலைதீவில் ஏற்பட்டுள்ள அரசியல்குழப்பங்கள் காரணமாக இலங்கை முதல் மொறிசியஸ் வரை கடற் கண்காணிப்பு ராடர்களை நிறுவும் இந்தியாவின் திட்டம் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
600 கோடி செலவில் கண்காணிப்பு ராடர்களை நிறுவும் இந்தியாவின் பெரும் எதிர்பார்ப்பிற்குரிய திட்டத்திற்கு 2011 ம் ஆண்டே அமைச்சரவை அனுமதியை வழங்கியிருந்தது.மும்பாய் தாக்குதலை மேற்கொண்டவர்கள் கடற்பகுதியூடாகவே இந்தியாவிற்குள் ஊருடுவியது தெரியவந்ததை தொடர்ந்தே இந்தியா இந்த திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்திருந்தது.
இலங்கையில் ஆறு ராடர்கள் கடற்போக்குவரத்தை கண்காணிக்கின்றன.
இலங்கை(6) மொறிசியஸ்(8) சீசலஸ்(1) ஆகிய நாடுகளில் இந்தியா இவ்வகை கண்காணிப்பு ராடர்களை வெற்றிகரமாக நிறுவியுள்ள போதிலும்,மாலைதீவில் 10 ராடர்களை நிறுவும் திட்டம் அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமரின் மாலைதீவிற்கான விஜயம் கடந்த வாரம் கைவிடப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்ட விஜயம் இடம்பெற்றிருந்தால் ராடர்களை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற்றிருக்கும் என தெரிவித்துள்ளன.சீசல்சிற்கான தனது கடந்த வார விஜயத்தின்போது இந்தியபிரதமர் ராடர் தொகுதியை அங்குரார்ப்பணம் செய்து வைத்திருந்தார்.
2009 இல் மாலைதீவின் 29 தீவுகளில் ராடர்களை நிறுவும் உடன்பாட்டில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டிருந்தன.பிராந்தியத்தின் கடற்போக்குவரத்து எவ்வாறுள்ளது என்பதை அறிந்துகொள்வதற்காக இந்த திட்டத்தை முன்னெடுக்க இரு நாடுகளும் இணங்கியிருந்தன.
எனினும் 2012 இல் மாலைதீவின் அப்போதைய ஜனாதிபதி முகமட் நசீட் பதவிவிலக்கப்பட்டதை தொடந்து,இந்த விடயத்தில் கருத்துவேறுபாடுகள் உருவாகின. சிறுசிறு விடயங்கள் தொடர்பாகவே இந்த முரண்பாடுகள் உருவாகியிருந்தன.எனினும்இது பிராந்தியத்தில் கடற் கண்காணிப்பு ராடர்களை நிறுவும் இந்தியாவின் திடட்டத்தை கடுமையாக பாதித்துள்ளது.
இந்திய கடற்படை இந்த திட்டம் தாமதமாவது குறித்து அதிகளவிற்கு கவலையடையாத போதிலும்,மாலைதீவில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வருவது குறித்தே இந்தியா கரிசனை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனா அங்கு இரு பாரிய உட்கட்டுமானதிட்டங்களை முன்னெடுத்துள்ளது.மாலைதீவின் தென்பகுதியிலுள்ள தீவொன்று உட்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
2009 ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஓப்பந்தத்தின் படி இந்தியாவின் கடற்பாதுகாப்பு திட்டத்திற்குள் மாலைதீவும் உள்ளடக்கப்படவிருந்தது.
மாலைதீவின் ராடர்தொகுதி இந்தியாவின் ராடர் திட்டத்துடன் இணைக்கப்படவிருந்தது. இதற்கான மத்திய நிலையம் குர்கானில் ஏற்கனவே செயற்பட்டு வருகின்றது. இலங்கை, மொறிசியஸ். சீசல்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள 50 ற்கும் மேற்பட்ட ராடர்களிலிருந்து உடனுக்குடன் தகவல்கள் இந்த நிலையத்திற்கு வருகின்றன.