செய்திகள்

இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் தமிழகத்தில் 2,500 கிலோ தங்கம் விற்பனை

இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் 2,500 கிலோ தங்கம் விற்றுள்ளது.

அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் வீட்டில் தங்கம் பெருகும் என்ற எண்ணம் மக்கள் மனதில் மேலோங்கியுள்ளது. அதனால் நகை கடை நடத்துவோரும் அட்சய திருதியை அன்று நகை வாங்குபவருக்கு பல்வேறு சலுகைகளை அறிவிப்பதால் தங்க நகைகளை வாங்க பொதுமக்கள் போட்டிபோட்டு வாங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் பெரிய நகை கடைகள் 12 ஆயிரமும், சிறிய அளவிலான நகை கடைகள் 10 ஆயிரமும் உள்ளன. கடந்த 2011 ஆம் ஆண்டு அட்சய திருதியை அன்று 700 கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு 720 கிலோவும், 2013 ஆம் ஆண்டு 1100 கிலோ தங்கமும் விற்பனை ஆனது.

கடந்த ஆண்டு 2014 ல் அட்சய திருதியை அன்று தங்கம் விற்பனை 1,500 கிலோவை தொட்டது. இந்த ஆண்டு கிராம் தங்கம் ரூ.2,526-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை குறைவாகக் காணப்பட்டதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்க நகைகளை வாங்கினர். இதனால் இந்த ஆண்டு தங்கம் விற்பனை 2,500 கிலோவை தொட்டு சாதனை படைத்துள்ளது.

சென்னையில் நேற்று அட்சய திருதியை முன்னிட்டு எவ்வளவு தங்கம் விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து சென்னை வைரம் மற்றும் தங்க வணிகர் ஒருவர் கூறுகையில்,

“சென்னையில் மட்டும் 6 ஆயிரம் முதல் 6,500 நகை கடைகள் உள்ளன. சாதாரண நாட்களை விட விழாக்காலங்களில் நகைகள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். குறிப்பாக அட்சய திருதியை முன்னிட்டு தங்க நகைகள் வாங்கினால், வீட்டில் தங்கம் பெருகும் என்ற எண்ணம் காரணமாக அன்றைய தினத்தில் தங்கம் விற்பனை அதிகமாக இருக்கும். அந்த வகையில் சென்னையில் மட்டும் தோராயமாக 2 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை ஆகியுள்ளது.

கடந்த ஆண்டில் இதே அட்சய திருதியை நாளில் ஒரு கிராம் தங்கம் ரூ.2,800-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.22 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. ஆனால் இந்த ஆண்டு அட்சய திருதியையில் ஒரு கிராம் தங்கம் ரூ.2,526-க்கும், ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 208-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 200 வரை குறைந்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தங்கம் விலை குறைந்து காணப்பட்டதால் தங்கம் விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.

வெள்ளியின் விலையும், அட்சய திருதியையான நேற்று சற்று குறைந்தே காணப்பட்டது. அதாவது நேற்று முன்தினம் மாலை 39 ரூபாய் 60 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் குறைந்து 39 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போன்று 36 ஆயிரத்து 970 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கட்டி வெள்ளி, 550 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 420 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அட்சய திருதியை நாளில் தென்மாநிலங்களில் தான் அதிக அளவு தங்கம் விற்பனை ஆவதாக நகை வணிகர்கள் தெரிவித்தனர். அதாவது மொத்த நகை விற்பனையில் 60 சதவீதம் தங்கம் தென்மாநிலங்களில் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் கூறினர். இந்த ஆண்டு தங்கம் மட்டுமின்றி அதிக அளவில் வைர நகைகளும் விற்பனை செய்யப்பட்டதாகவும் வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.