செய்திகள்

‘இனப்படுகொலை’த் தீர்மானம் புதிராகவே உள்ளது: நாடும் நாளையும் நிகழ்வில் ரணில்

வடமாகாண சபையில் இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது எனத் தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்தத் தீர்மானம் தொடர்பாகக் கவலையடைவதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு இடம்பெற்ற ‘நாடும் நாளையும்’ என்ற தலைப்பிலான அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போதே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

“தமிழீழக் கோரிக்கைக்கு அரசாங்கம் இணங்குமா?” எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் மேலும் முக்கியமாகக் கூறியதாவது:

“தற்போதுதான் ஈழம் என்று ஒன்றும் கிடையாதே. நாம் ஒருபோதும் விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளுக்கு இணங்கியதில்லை. நாம் மாகாண சபையை முறையாகக் கொண்டு செல்கின்றோம். இந்த நிலையில் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக கவலையடைகின்றோம். அந்தத் தீர்மானம் தறவான ஒன்று. அதனை ஏன் நிறைவேற்றினார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

நாம் வடக்கில் மக்களின் மீள்குடியேற்றத்துக்காக ஆயிரம் ஏக்கர் காணியை வழங்கவுள்ளோம். அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் தேவையானவைகளைச் செயற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த நிலையில் இவ்வாறான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது.”

இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.