செய்திகள்

இனப்படுகொலை தீர்மானம் ஐ. நா. பொதுச் செயலாளருக்கும் மனித உரிமைகள் சபைக்கும் அனுப்பிவைப்பு

வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானத்தின் பிரதிகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கும் மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே .சிவஞானம், தமிழ் மக்களின் உண்மையான அழிவுகளையும் இழப்புக்களையும் விளங்கிக் கொண்டு நீதியான நீயாயமான முறையில் செயற்பட வேண்டியது அவசியமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பிலான போர்க்குற்ற விசாரணை அறிக்கை திட்டமிட்டபடி மார்ச்சில் வெளியிடப்படவேண்டும் என்றும் அவ்வாறில்லாமல் அறிக்கையானது செப்டெம்பரில் வெளியிடபப்டுமானால் ஐ. நா. விசாரணையாளர்கள் இலங்கை வந்து புது ஆதாரங்களை உள்ளடக்கி அறிக்கையினை வெளியிடவேண்டும் என்றும் அவர் இன்று வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக சிவஞானம் மேலும் தெரிவிக்கையில்:

ஈழத் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டது இனப்படுகொலையே என்றும் இதற்கு சர்வதேச விசாரணையே அவசியமென்றும் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அத் தீர்மானப் பிரதிகள் ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் ஆணையாளர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணை அறிக்கை வெளியிடப்பட இருந்த நேரத்திலேயே இந்தப் பிரேரணை கொண்டு வரப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனை அனுப்பி வைப்பதனூடாக விசாரணை அறிக்கையை மேலும் வலுப்படுத்துமென்றே எதிர்பார்த்திருந்தோம்.

ஆனால் அந்த அறிக்கையை வெளியிட வேண்டுமென தமிழ்த் தரப்புக்கள் கோரி வந்திருந்த நிலையில் இதனை ஒத்திவைக்குமாறு அரச தரப்பினர்கள் கோரி வந்திருந்தனர். இந் நிலையில் மார்ச்சில் வெளியிடாமல் செப்ரெம்பர் மாதத்தில் வெளியிடுவதாக பிற்போடப்பட்டு அறிவிக்கப்பட்டள்ளமையானது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்குமே பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்நிலையில் அதனை ஏற்கனவே திட்டமிடப்பட்டது போன்று மார்ச்சிலேயே வெளியிடப்பட வேண்டுமென்றெ நாம் கோருகின்றொம். அவ்வாறு வெளியிடுவதனையே தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர். நீதி கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் இருந்த மக்கள் சர்வதேசத்தை நம்பினர். அந்த நம்பிக்கையிலையே இன்று நீதிக்காய் காத்திருக்கின்றனர்.

ஆயினும் இதனை செப்ரெம்பர் மாதத்திற்கு பிற்போடப்பட்டு அறிக்கை தாமதமாக வெளியிடுவதாக இருந்தால் குறிப்பிட்ட காலப்பகுதியில் தொடர்ந்தும் இலங்கைக்கு வருகை தந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அதனுடாக கிடைக்கின்ற சாட்சியங்களையும் உள்ளடக்கியதாக செப்ரெம்பரில் அறிக்கை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்.

இவ்வாறு அறிக்கை பிற்போடப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதனை மார்ச்சிலேயே வெளியிட வலியுறுத்தியும் பல்கலைக்கழக சமூகம் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து நேற்று முன்னதினம் மாபெரும் பேராட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்தனர். இதற்கு நாமும் ஆதரவு தெரிவித்துக் கலந்து கொண்டிருந்தோம்.

இலங்கை மீதமான விசாரணை அறிக்கையானது மார்ச்சிலேயே வெளியிட வேண்டும். இதுவே நீண்டகாலமாக காத்திருக்கின்ற தமிழ் மக்களுக்கு கிடைக்கக் கூடிய நீதியாக அமையும். இதனையே சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டியதும் அவசியமாகும்.

தமிழினத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் அநீதிகளுக்கு தமிழ் மக்கள் நீதி வேண்டி நிற்கின்றனர். இதனை இலங்கை அரசு வழங்காது என்ற காரணத்தினாலேயே சர்வதேச சமூகத்திடம் தமிழ் மக்கள் சென்றனர். ஆனவே சர்வதேசத்தை நம்பியுள்ள தமிழ் மக்களை சர்வதேசம் கைவிடாது பாதுகாத்து நீதிணைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

ஓட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்தின் கோரிக்கையாக தற்போதும் இருப்பது இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதி, நியாயம் கிடைக்க வேண்டுமென்பதே ஆகும். இதனை விடுத்து இலங்கை அரசின் உள்நாட்டு விசாரணையில் எந்தவித நம்பிக்கையும் இல்லை. இதனை வரலாறுகள் எமக்கு தெளிவாகவே எடுத்துக் கூறுகின்றன. ஆகவே சர்வதேச விசாரணையினுடாக நீதி கிடைக்க வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் கோருகின்றோம் என்றார்.