செய்திகள்

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த சந்தர்ப்பத்தை அரசு சரியாக பயன்படுத்த வேண்டும்: வட மாகாண சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

மூன்று தசாப்பத காலமாக தீர்வின்றி இழுத்தடிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான பிரச்சனைகளுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைப்பதற்கான அரிய சந்தர்ப்பம் தற்போது இலங்கை அரசிற்கு கிடைத்துள்ளது. இதனை புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் சரியாக பயன்படுத்தவேண்டுமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களாக ஆக்கப்பட்ட விசேட தேவைக்குட்பட்ட 22 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியாக கோழிக்குஞ்சுகளும் கூடு அமைப்பதற்கான நிதியுதவியும் வழங்கி வைத்து உரையாற்றியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

இந்தபோரினால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டம் முல்லைத்தீவு ஆகும். கண்மூடித்தனமான எறிகணைவீச்சினாலும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்தமையினாலும் மகிந்த அரசு எம்மவர்களை தனித்து இயங்க முடியாதவர்களாக ஆக்கியுள்ளது. குறிப்பாக இந்த கொடிய யுத்தத்தினால் அவயவங்களை இழந்து முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு மற்றவர்களில் தங்கி வாழ்பவர்களாக நம் சமூகத்தில் பலர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை தூக்கி விடவேண்டிய பாரியபொறுப்பு எமக்குள்ளது.

எனினும் கடந்த ஒருவருடமாக உங்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாண சபையானது சுதந்திரமாக இயங்கமுடியாத நிலையிருந்தது. எனினும் தற்போது பதவியேற்றுள்ள அரசின் நல்லெண்ண நடவடிக்கைகள் ஓரளவிற்கு நம்பிக்கையூட்டக்கூடியதாக அமைந்துள்ளது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்று தற்போது சிவில் ஆளுனர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் மக்களுக்கு சுதந்திரமாக பணியாற்றக்கூடிய நிலை உருவாகும் என நம்புகின்றோம். என்று கூறினார்.

இதனைதொடர்ந்து வேராவில்,வள்ளிபுனம், தேவிபுரம் ஆகிய பகுதிகளில் மக்கள் சந்திப்புகளிலும் கலந்துகொண்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கேட்டறிந்தார். இதன்போது முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினரும் பிரதி அவைத்தலைவருமாகிய அன்ரனி ஜெயநாதன், மாகாண சபை உறுப்பினர் மேரிகலா குணசீலன், முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித்தலைவர் ஈசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

IMG_8980[1] IMG_9017[1] IMG_9025[1] (1)