செய்திகள்

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு விஷேட நல்லிணக்கக்குழு: ரணிலின் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

இனப்பிரச்சினை உட்பட நீண்டகாலமாக தீர்வு காணப்படாத விவகாரங்களுக்கு விரைவான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி செயலணிப் பிரிவு விடே நல்லிணக்கக்குழுவை அமைப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இது தொடர்பான யோசனை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் இதற்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரமளித்திருப்பதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டாக்டர். ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இதுதொடர்பாக ராஜித சேனாரத்ன மேலும் விளக்கமளிக்கையில் தெரிவித்ததாவது;

“இனநெருக்கடி உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கும் நீண்டகாலமாக தீர்வுகாணப்படாமல் காலம் கடந்து கொண்டுபோவதால் அவற்றை விரைவாக தீர்ப்பதற்கான வழிமுறைகளைச் கண்டறியும் பொருட்டு தேசிய நல்லிணக்க குழுவொன்றை அமைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நல்லிணக்கக்குழு ஜனாதிபதி செயலணிப் பிரிவின் கீழ் இயங்கும் வகையில் அமைக்கப்படும்.

இந்த நல்லிணக்கக் குழு இரண்டு குறிக்கோள்களின் அடிப்படையில் செயற்படும். முதலாவதாக உடனடித் தேவைகள் குறித்த யோசனைகளை முன்வைப்பதாக இருக்கும். இரண்டாவதாக நீண்டகாலத் தீர்வுக்கான பரிந்துரைகளைச் செய்வதாகும். இனங்களுக்கிடையே சமாதான, சகவாழ்வை உறுதிப்படுத்தும் பொருட்டே இந்த நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுக்க அரசு தீர்மானித்துள்ளது.

இனங்களுக்கிடையேயான முரண்பாடுகளையும் பிளவுகளையும் இல்லாதொழித்து ஒற்றுமையையும் சமாதானத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கிலேயே தேசிய நல்லிணக்க குழு அமைக்கப்படுகின்றது. இக்குழுவில் ஏழுபேர் இடம்பெறுவர். இதற்கான நியமனங்கள் அடுத்துவரும் சில தினங்களுக்கிடையில் இடம்பெறும்.

இந்த இனப் பிரச்சினையுடன் தொடர்புபட்டதாக கடந்த காலத்தில் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் விடயத்தில் விரைவான தீர்வினைக் காண முன்னுரிமை கொடுக்கப்படும். பொலிஸ்மா அதிபரால் வழங்கப்பட்டிருக்கும் விபர அறிக்கையின் படி, தற்போது 275 தமிழ்க் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 275 கைதிகளும் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதோடு ஆதாரங்கள் சாட்சியங்கள் இல்லாதவர்களை முதற்கட்டத்தில் விடுதலை செய்வதற்கும் ஏனையவர்கள் தொடர்பில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

கொலைச் சம்பவங்கள் போன்ற பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்போர் விடயத்தில் நீதிமன்றச் செற்பாடுகள் மூலம் தீர்வு காணப்படும். இனப் பிரச்சினையை தொடர்கதையாக வைத்திருக்க அரசு விரும்பவில்லை. இன ஐக்கியத்தை உறுதிப்படுத்துவதே அரசின் ஒரே நிலைப்பாடாகும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர். ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.