செய்திகள்

இன்புளூவன்ஸா வைரஸ் தொற்று யாழில் பெண்ணொருவர் நேற்றுப் பலி:மேலும் பலர் சிகிச்சைக்கு அனுமதி

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்புளூவன்ஸா வைரஸ் தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மன்னாரைச் சேர்ந்த பெண்ணொருவர் நேற்று வியாழக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தார்.

இந்த நிலையில் குறித்த நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 9 சிறுவர்கள்,6 கர்ப்பிணிகள் உட்பட 20 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,பலர் இந்நோய்க்குச் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி.பவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று வாரங்களாக இன்புளூவன்ஸா தொற்றுக்குள்ளானவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக வருகை தர ஆரம்பித்துள்ளனர்.யாழ்.மாவட்டத்தில் இன்புளூவன்ஸா வைரஸ் தொற்றுப் பரியளவில் தாக்கத்தைச் செலுத்தியிருக்காவிட்டாலும் பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
யாழ்.நகர் நிருபர்-